மேலும்

போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன் – சரத் பொன்சேகா

sarath-fonsekaஎனது கட்டளைக்கேற்ப போர் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன், அதேவேளை, போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன்  என்று சிறிலங்கா அமைச்சரான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிரிபத்கொடைவில்  நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,’ பெளத்த பிக்குகளை விமர்சிப்பதாக எம்மீது சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பெளத்த தேரர்களுக்கு நாம் உயரிய மரியாதைகளை வழங்கி வருகின்றோம்.  அவர்களை ஒருபோதும் நாம் அவமதிக்கவில்லை.

மகாநாயக்க தேரர்களை ஒவ்வொரு நாளும்  வணங்கி வருகின்றோம். ஆனால் ஒருசில பெளத்த தேரர்கள் எம்மை விமர்சித்து சில தவறான கருத்துக்களை முன்வைத்தனர்.

நாம் இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிகளை எடுப்பதாக கூறினார்கள். அவர்கள் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தனர். அவர்கள் அரசியல் விமர்சனங்களை முன்வைத்து அதற்கு நாமும் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் போது அதனை தவறாக விமர்சிப்பது ஏற்றுகொள்ள முடியாதது.

இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எம்மிடமும் உள்ளது. நாம் கூறும் கருத்துக்களை தவறாக அர்த்தப்படுத்தி மீண்டும் மோசமான அணியை உருவாக்க சில தேரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக நான் முன்வைத்த கருத்துகளினால் பிரச்சினைகள் எழவில்லை. போர் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்த பிரச்சினைகள் எமக்கு எதிராக எழுந்துள்ளன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் தகவல்களை   கொண்டே எமக்கு எதிராக அழுத்தங்கள் எழுந்துள்ளன.

இதில் முழுமையாக இராணுவ வீரர்களை எவரும் குற்றம் கூறவில்லை. இராணுவத்தில் இருந்த பிரதான அதிகாரிகள் சிலர் மீதே இந்த குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் உண்மைத் தன்மையை விசாரணைகளின் மூலமாக ஆராய்வது தவறல்ல .

போரை நடத்திய  இராணுவ தளபதி என்ற அடிப்படையில் எமது இராணுவத்தில்  குற்றவாளிகள்  இருந்தால் அவர்களை பாதுகாக்க நான் முன்வரமாட்டேன்.

அரசாங்கம் என்ற வகையில் இது அனைத்து தலைவர்களையும் பாதிக்கும். நான் ஒருபோதும் அனைத்துலக  நீதிமன்றத்தின் முன்னால் சென்று நிற்கப் போவதில்லை. பதில் கூறப்போவதுமில்லை.

எனது கட்டளையின் கீழ் செயற்பட்ட எவரையும் நீதிமன்றத்தில்   நிறுத்த நான் தயாரில்லை. அதனை விரும்பவும் இல்லை.

அதேபோல் இராணுவத்தில் ஒரு சிலர் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களுக்கு எதிராக  இந்த நாட்டின் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *