மேலும்

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

Lieutenant General Mahesh Senanayakeவடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை நிகழ்த்தி விட்டு செய்தியாளர்களிடம் உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இரண்டு மாகாணங்களிலும், நிலைமைகளை நன்கு ஆராய்ந்து விட்டே, படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை

சிறிலங்கா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், மற்றும் முப்படைகளுக்கு நாட்டைப் பாதுகாக்கின்ற பொறுப்பு இருக்கிறது.

சிறிலங்கா இராணுவம் வடக்கில் பல்வேறு சேவைகளை ஆற்றுகிறது. அவர்கள் கல்வி, சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை, அமைதியாக தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள்.

ஐ.நா சாசனங்களின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவம் ஒழுக்கமாகச் செயற்படும் ஒரு படையாக இருக்கிறது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதி வைகோ ஆகியோரின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் பின்னர், முதலமைச்சரை தொலைபேசியில் அழைத்து, மகாநாயக்கர்களைச் சந்தித்தமைக்கு வரவேற்புத் தெரிவித்ததுடன், நாட்டுக்காக ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

சிறிலங்கா இராணுவம், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டதே தவிர, தமிழ் மக்களுக்கு எதிராகப் போரிடவில்லை.

அதுபோல, வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் சிறிலங்கா படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுவதும் பொய்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *