மேலும்

ஐ.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா மறுப்பு – அமெரிக்காவே காரணம்

ஐ.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஐ.நா பிரகடனம் தொடர்பான உடன்பாடு, வரும் 20ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, கையெழுத்திடப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போது அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்களில், இந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் கடைசி நேர அழுத்தங்களால், சிறிலங்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அணு ஆயுத தடை பிரகடனத்தை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த உடன்பாட்டை சட்டபூர்வமாக்குவதற்கு, இதில் குறைந்தபட்சம் 50 நாடுகள் கையெழுத்திட வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு 38 நாடுகள் மாத்திரம் இணங்கியுள்ளன. எனினும், இதில் கையெழுத்திடும் நாடுகளின் எண்ணிக்கை வேறுபடலாம்.

அதேவேளை, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் இருந்து நழுவும் சிறிலங்காவின் முடிவு திகைப்பை ஏற்படுத்துவதாக சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

இது அணிசேரா கொள்கையை சிறிலங்கா கைவிட்டு வருவதைப் பிரதிபலிக்கிறது என்றும் கொழும்பின் முடிவுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.  எனினும் ஏனைய தெற்காசிய நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *