மேலும்

வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி

basil-chandrasiriபோருக்குப் பிந்திய காலகட்டத்தில் வடக்கில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ச – மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அணி, மீண்டும் வடக்கை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராகவும் அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவே, வடக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக செயற்பட்டார். வடக்கின் வசந்தம் என்ற பெயரில், எல்லாத் திட்டங்களையும் கையாண்டார். இதில் பெருமளவு முறைகேடுகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் வடக்கு மாகாண ஆளுனராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, பசில் ராஜபக்சவுடன் இணைந்து, வடக்கு மக்களையும், அரச நிர்வாகத்தையும் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் வைத்திருந்தார்.

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், வடக்கு அரங்கில் இருந்து அகற்றப்பட்ட இவர்கள் இருவரும், மீண்டும் ஒன்றிணைந்து வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

basil-chandrasiri

பசில் ராஜபக்சவை அமைப்பாளராக கொண்ட, சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கான, உறுப்பினர்களையும், அமைப்பாளர்களையும் தெரிவு செய்வதற்கே, பசில் ராஜபக்ச, மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளிட்டோரைக் கொண்ட குழு வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வரும், 21, 22, 23 ஆம் நாள்களில், இவர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இதன்போது, கடந்த ஆட்சிக்காலத்தில் தமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்களை அழைத்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ள மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்தே, பசில் ராஜபக்ச- சந்திரிசிறி கூட்டணி மீண்டும் வடக்கில் செயற்படத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *