மேலும்

புலிகளுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி?

ltte-supectsபோர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதிகளாக இருந்த 18 சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் 8 கடற்படையினரைப் படுகொலை செய்தார்கள் என்று வவுனியா மேல் நீதிமன்றில் மூன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு வீதியில் உள்ள விக்டர் முகாம்-4இல் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தினர் இந்த முகாமை நெருங்கி வந்த போது, இவர்களைக் கொன்று விடுமாறு விடுதலைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், முகாமின் பொறுப்பாளராக இருந்த கோபிக்கு உத்தரவிட்டதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, அயலில் உள்ள காடுகளில் விறகுகள் சேகரிக்கப்பட்டு பாரிய தீ வைக்கப்பட்டது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக நிறுத்தப்பட்ட படையினர், சுடப்பட்டு, அவர்களின் சடலங்கள் தீயில் எரிக்கப்பட்டதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது விறகுகளைச் சேகரிக்க உதவியவர்கள் என்று கூறப்படும் இரண்டு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செங்கன் எனப்படும் இராசதுரை திருவரன், மதியழகன் சுலக்சன், கணேசன் தர்சனன் ஆகியோருக்கு எதிராக, வவுனியா மேல் நீதிமன்றில் கொலைச் சதி,  கொலைகளுக்கு உதவினார்கள், உடந்தையாக இருந்தார்கள் என்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

இந்த வழக்கு செப்ரெம்பர் 27ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, எதிரிகள் மூவரையும், சாட்சிகளையும் முன்னிலையாகுமாறு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இரண்டு சாட்சிகளுக்குமே தற்போது அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த விசாரணைகளின் அடிப்படையில் அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே, வவுனியாவுக்கு வெளியே இந்த வழக்கை மாற்றுவது குறித்து சட்டமா அதிபர் முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து இந்த வழக்குகளை மாற்ற முயற்சி எடுக்கப்பட்ட போது, மூன்று சந்தேக நபர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதையடுத்து, வழக்குகளை வவுனியா மேல்நீதிமன்றிலேயே விசாரிக்க வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி நாள் குறித்திருந்தார்.

இந்த நிலையில், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் விசாரணைகளை ஆரம்பித்து, வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து வழக்கை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>