மேலும்

ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் – சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்டதாம்

sarath-jegathசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்காலத்தில் குற்றங்களை இழைத்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியமை, அவரது தனிப்பட்ட கருத்தே என்று சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும், ருவான் விஜேவர்த்தனவும் தெரிவித்துள்ளனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பாக, கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

“இது அவரது தனிப்பட்ட கருத்தேயன்றி அரசாங்கத்தின் கருத்து அல்ல. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜயசூரியவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடே இதற்குக் காரணம்.

இந்த சர்ச்சைகளுக்கு சிறிலங்கா அதிபரின் தலையீட்டில் தீர்வு காணும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, “போரின் போது, ஜெனரல் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை. ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்படும்.

சரத் பொன்சேகாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அரசாங்கத்தின் கருத்து அல்ல.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *