மேலும்

சிறிலங்காவில் தமிழ் அச்சு இதழ்களின் விற்பனை வீழ்ச்சி – சிங்கள, ஆங்கில இதழ்கள் அதிகரிப்பு

srilanka-newspapersசிறிலங்காவில், சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தமிழ், நாளிதழ்கள், வாரஇதழ்களின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள, பொருளாதார சமூக புள்ளிவிபரங்கள் அறிக்கையில் இதுதொடர்பான தரவுகள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவில் தேசிய மட்டத்தில் வெளியாகும்  இதழ்களின்,508.08 மில்லியன் பிரதிகள்  2015ஆம் ஆண்டு விற்பனையாகியிருந்தன. 2016ஆம் ஆண்டு, இது 538.82  மில்லியன் பிரதிகளாக அதிகரி்த்துள்ளது,

உலகின் பல நாடுகளில் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வரும் அச்சு இதழ்களின் விற்பனைப் போக்கிற்கு இது எதிர்மாறானதாகும்.

இணையம், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி, செய்தி செயலிகள், போன்ற அதிவேக, தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாட்டினால், பல நாடுகளில், அச்சு இதழ்களின் விற்பனை சரிந்து வருகிறது.

ஆனாலும், 2015ஆம் ஆண்டை விட, 2016ஆம் ஆண்டு, சிறிலங்காவில் அச்சு இதழ்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது.

மத்திய வங்கி புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2015ஆம் ஆண்டு. 383.13 மில்லியன் பிரதிகளாக இருந்த நாளிதழ்களின் விற்பனை, 2016ஆம் ஆண்டு 411.76 மில்லியன் பிரதிகளாக அதிகரித்துள்ளது.

1000 பேருக்கு, 58 பிரதிகள் என 2015 இல் காணப்பட்ட நாளிதழ்களின் விற்பனை, 2016இல், 1000 பேருக்கு 62 என அதிகரித்துள்ளது.

srilanka-newspapers

சிங்கள நாளிதழ்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. 226.49 மில்லியன் பிரதிகளில் இருந்து, இது 259 மில்லியன் பிரதிகளாக ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளது.

ஆங்கில நாளிதழ்களின் விற்பனையும், ஆண்டுக்கு 80.73 மில்லியன் பிரதிகளில் இருந்து, 91.8 மில்லியன் பிரதிகளாக அதிகரித்துள்ளது.

எனினும், தமிழ் நாளிதழ்களின் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. 2015இல், 75.91 மில்லியன் பிரதிகளாக இருந்த தமிழ் நாளிதழ்களின் விற்பனை,  2016இல், 60.97 மில்லியன் பிரதிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சிறிலங்காவில் வாரஇதழ்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது, 2015இல் , 124.95 மில்லியன் பிரதிகளாக இருந்த வாரஇதழ்களின் விற்பனை, 127.06 மில்லியன் பிரதிகளாக, 2016இல் அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே, 1000 பேருக்கு 115 வாரஇதழ் பிரதிகள் என்ற நிலையே, 2016இலும் தொடர்ந்துள்ளது.

நாளிதழ்களைப் போலவே, சிங்கள, ஆங்கில வாரஇதழ்களின் விற்பனையும், அதிகரித்துள்ளது. 2015இல், 124.95 மில்லியன் பிரதிகளாக இருந்த சிங்கள வாரஇதழ்களின். விற்பனை, 2016இல், 127.06 மில்லியன் பிரதிகளாக அதிகரித்துள்ளது.

ஆங்கில வாரஇதழ்களைப் பொறுத்தவரையில், 22.49 மில்லியன் பிரதிகளில் இருந்து, 24.45 மில்லியன் பிரதிகளாக விற்பனை உயர்ந்துள்ளது,

எனினும், தமிழ் நாளிதழ்களைப் போலவே, தமிழ வாரஇதழ்களின் விற்பனையிலும், சரிவு ஏற்பட்டுள்ளது.

2015இல், 21.65 மில்லியன் பிரதிகளாக இருந்த தமிழ் வாரஇதழ்களின் விற்பனை, 2016இல், 19.32 மில்லியன் பிரதிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. என்றும் சிறிலங்கா மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *