மேலும்

வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ

Deniswaranஅமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும், வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை, தமது கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் வாரியத்தை மாற்றியமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் புதிய அமைச்சர் வாரியத்தை அமைப்பதற்காக, பதவியில் இருந்து விலகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை  அமைச்சர் டெனீஸ்வரன் மறுத்து வந்தார்.

இந்தநிலையில், வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு கூடி இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை நடத்தியது.

நேற்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடந்த இந்தக் கூட்டத்திலேயே, அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவர் குறித்த தீர்மானத்தை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு வவுனியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரெலோவின் பொதுச்செயலர் என்.சிறீகாந்தா இதனை அறிவித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு டெனீஸ்வரன் ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *