மேலும்

ஐ.நா நிபுணரின் அறிக்கை நாட்டின் இறைமையை மீறுகிறது – சிறிலங்கா பாய்ச்சல்

Wijeyadasa Rajapaksheஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை, சிறிலங்காவின் இறைமையை மீறியுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் நீதித்துறை தொடர்பாக, அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட, நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுயாதீனம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோவின் அறிக்கையில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று அறிவித்தார்.

“சிறிலங்காவில் ஏழு நாட்கள் மட்டுமே தங்கியிருந்த அவரது குற்றச்சாட்டுகள் எமக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. பல்வேறு நாடுகளின் நீதி முறைமைகள் தொடர்பான அவரது ஆற்றல் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

இந்த அறிக்கை சிறிலங்காவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் இறைமையை மீறுகிறது.

அரசியலமைப்பு பேரவை தொடர்பான மோனிகா பின்டோவின் கருத்து ஏற்புடையதல்ல.

அவர் தனது அறிக்கையில், அரசியலமைப்புப் பேரவை சுதந்திரமானது அல்ல என்றும், எல்லா நியமனங்களையும் சிறிலங்கா அதிபரே செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா அதிபரால் நியமனங்களைச் செய்ய முடியும் என்பதை அவர் அறியவில்லை.

அரசசார்பற்ற நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் தான் பின்டோவின் அறிக்கை அமைந்திருக்கிறது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் இந்த அறிக்கை தொடர்பான அதிகாரபூர்வ நிலைப்பாட்டை,  இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் அ வர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *