மேலும்

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – வெள்ளிக்கிழமை கிடைக்கும்

eu-flagஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிலங்காவுக்கான பணியகம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர்  துங் லாய் மார்கே, இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில்,

‘சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதனால் வரும் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ இதழில், சிறிலங்காவுக்கான இந்த அனுமதி அச்சிடப்படும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து, ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை சிறிலங்கா பெற்றுக் கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியமே இருந்து வருகிறது. சிறிலங்காவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய நாடுகளுக்கே இடம்பெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஆண்டு தோறும் 4 பில்லியன் யூரோவுக்கு இருதரப்பு வர்த்தகம் இடம்பெறுகிறது.

சிறிலங்காவில் இருந்து 2.6 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்கிறது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் மூலம் சிறிலங்காவுக்கு ஆண்டுக்கு 300 மில்லியன் யூரோ வரையான தீர்வை விலக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *