மேலும்

தெற்கு, மத்திய ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான கதவுகளை திறந்து விடும் அமெரிக்கா

donald-trumpதெற்கு மற்றும் மத்திய ஆசியா மீதான தனது நிர்வாகத்தின் வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான உதவித் திட்டத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு திட்டங்களை இலக்கு வைத்தே தனது வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாடுகளுக்கான உதவிகளைக் குறைப்பதாக ஆட்சிக்கு வரும்போது ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ஆசியப் பிராந்திய தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பு போன்ற வேறு சில திட்டங்களையும் அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் முன்னுரிமைப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் தென் மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க நான்கு நாடுகளுக்கு முழுமையான உதவித் திட்டங்களை வழங்குவதையும் இப்பிராந்தியத்தின் அரைவாசிப் பகுதிக்கு சிறியளவிலான உதவிகளை வழங்குவதையும் நோக்காகக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் ரம்ப் நிர்வாகத்தின் புதிய வரவுசெலவுத் திட்டமானது அபிவிருத்திக்கான உதவி மற்றும் ஐரோப்பா, யுரேசியா, மத்திய ஆசியா போன்ற நாடுகளுக்கான உதவி (AEECA)  போன்ற இரு வகையான உதவித்திட்டங்களையும் நீக்கவுள்ளது. இவ்விரு உதவித் திட்டங்களுக்கும் பதிலாக அமெரிக்காவின் உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ள நாடுகளுக்கு பொருளாதார ஆதரவு நிதியம் என்கின்ற திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடானது சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தவகையில், புதிய வரவு செலவுத் திட்டத்தில் ESF என்கின்ற பொருளாதார ஆதரவு நிதியம் என்கின்ற திட்டம் புதிதாக உட்சேர்க்கப்படவுள்ளமையானது, ‘ட்ரம்ப் தனது முன்னைய ஆட்சியாளர்களை விட மிகக் குறுகிய காலத்தில் தனது அரசியல் நோக்குகளை அடைந்து கொள்வதற்காக வெளிநாட்டு உதவியைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார் என்பதையே’ சுட்டிக்காட்டுகிறது.

ஏனெனில் இத்தகைய பொருளாதார ஆதரவு நிதியத் திட்டம் என்பது எப்போதும் உண்மையான அபிவிருத்தி விளைவுகளுடன் குறைந்தளவிலேயே தொடர்பைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நிதியாண்டு 2018’  ஐ கூர்ந்து அவதானிக்கும் போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவித் திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான இயலுமைகளை ஆச்சரியமளிக்கும் வகையில் குறைத்து மதிப்பீடு செய்வதைக் காண்பிக்கின்றது.

இதற்கும் மேலாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களை நோக்கி பாரிய சீன உதவித் திட்டங்கள் காணப்படுகின்ற இந்த வேளையில், அமெரிக்காவின் சிறியளவிலான உதவிகள் இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குப் பிடிக்க முடியுமா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது.

donald-trump

மத்திய ஆசியா மீதான தாக்கங்கள்:

மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகள் (AEECA)  என்கின்ற அமெரிக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. ஆனால் அமெரிக்கா தனது வரவு செலவுத்திட்டத்தில் இத்திட்டத்தை நீக்கவுள்ள நிலையில், மத்திய ஆசியாவில் இது  தாக்கத்தைச் செலுத்தும். (AEECA)  திட்டமானது பனிப்போருக்குப் பின்னான காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா மற்றும் யுரேசியா போன்ற பிராந்தியங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். உண்மையில் இத்திட்டமானது எதிர்பார்த்த ஆண்டுகளை விட அதிக காலம் நீடித்துள்ளதாக பூகோள அபிவிருத்திக்கான மையத்தால் 2012ல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறு நிதித் திட்டங்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை நிர்வகிப்பதென்பது சவாலானதாகும். இந்நிலையில் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை அமெரிக்கா தனது நிர்வாகத்தை நடத்துவதற்கு இலகுவானதாக இருக்கலாம். இத்திட்டத்தை முடிவிற்குக் கொண்டுவரப் போவதாக பராக் ஒபாமாவின் நிர்வாகம் தனது 2013 நிதியாண்டில் பரிந்துரைத்திருந்தது.

ஆனால் (AEECA)   திட்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதால் என்ன நடக்கும்? கசகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கான உதவித் திட்டம் முடிவிற்கு வரும். நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடாக உலக வங்கியால் இனங்காணப்பட்டுள்ள கசகஸ்தான் அமெரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட உதவியான 6 மில்லியன் டொலரை இதுவரை காலமும் பெற்றுக் கொண்டுள்ளது.

இதேபோன்று சர்வாதிகாரத்துவ ஆட்சி நடைபெறும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடாக விளங்கும் துர்க்மெனிஸ்தானுக்கு அமெரிக்காவால் 3.9 மில்லியன் டொலர் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடானது வடகொரியாவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது தனிமைப்படுத்தப்பட்ட நாடு என அண்மையில் கார்டியன் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய நிதியாண்டில் இந்த நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்ட உதவித் திட்டமும் நீக்கப்பட்டுள்ளமை துர்க்மெனிஸ்தானுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவித் திட்டமானது பொருளாதார ஆதரவு நிதியம் என்கின்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழங்கப்படும். உஸ்பெகிஸ்தானுக்கான உதவித் திட்டம் முன்னரை விட சிறிதளவு அதிகரிக்கும்.

வர்த்தகச் செயற்பாடுகள்:

அமெரிக்காவில் புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இதன் வெளியுறவுக் கோட்பாட்டில் பல மாற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்த வகையில் மத்திய ஆசியாவுடனான வர்த்தகச் செயற்பாடுகள் சிறிதளவில் இடம்பெறும் எனக் கருதப்படுகிறது. ‘மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உதவியானது முக்கிய பங்காற்றுகிறது’ என ஒபாமா நிர்வாகத்தின் போது அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்தி மையத்தின் ஆசியாவிற்கான உதவிச் செயலராகப் பணியாற்றிய நிசா தேசாய் பிஸ்வால் தெரிவித்திருந்தார்.

மத்திய ஆசியா முழுமைக்குமான அமெரிக்காவின் உதவித் திட்டமானது, ‘தீவிரவாதத்தை எதிர்த்தல், பொருளாதாரத் தொடர்பாடலை மேம்படுத்துதல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சி போன்றவற்றை அதிகரித்தல்’ போன்ற பல்வேறு விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதாக நிசா பிஸ்வால் குறிப்பிட்டிருந்தார். மத்திய ஆசியப் பிராந்தியம் முழுமைக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான பொருளாதாரத் தொடர்பாடலானது ஆப்கான் பொருளாதாரத்திற்கு நீண்டகால அடிப்படையில் வலுச்சேர்க்கும் என்பதால் அமெரிக்கா தனது மூலோபாய முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தொடர வேண்டும்.

அமெரிக்கா புறந்தள்ளப்படுதல்:

சீனாவின் உதவித் திட்டமானது மத்திய ஆசியா நோக்கி அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா இப்பிராந்தியத்திற்கான தனது நிதியுதவியைக் குறைத்தால் மூலோபாய ரீதியாக அமெரிக்கா பின்தள்ளப்படும். குறிப்பாக சீனாவானது இப்பிராந்தியத்தில் தனது ஒரு அணை ஒரு பாதை என்கின்ற திட்டத்தை அமுல்படுத்துவதற்காக மிகத் துரிதமாக பாரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருவதைக் காணமுடியும்.

சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம் கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் ஊடாக புதிய தொடருந்துப் பாதைகளை அமைத்து வருகிறது. அத்துடன் கிர்கிஸ் குடியரசு மற்றும் தஜிகிஸ்தானின் ஊடாக சீனாவிற்கான தரைவழிப் பாதைகளும் அமைக்கப்படுகின்றன. ஆகவே சீனா தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய ஆசிய நாடுகளில் பாரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில், அமெரிக்காவின் சிறியளவிலான உதவிகள் இந்த நாடுகளில் புறந்தள்ளப்படும். அத்துடன் இந்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுநிலையும் எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை என்பதால் இந்த நாடுகளுடனான  தொடர்பாடல் அமெரிக்காவிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.

silk road

சுகாதாரத் திட்டங்களுக்கான நிதியுதவிகள் குறைக்கப்படுதல்:

மத்திய ஆசியாவை விட தென்னாசியாவானது குறைந்தளவு செழுமை மிக்கது, அதிகளவான மக்களைக் கொண்டுள்ள பிராந்தியமாகும். ஆகவே இந்த நாடுகள் விவசாயம்  தொடக்கம் சுகாதாரம் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி, ஜனநாயகம், ஆட்சி போன்ற பல்வேறு விடயங்களிலும் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளன. பல பத்தாண்டுகளாக இப்பிராந்திய நாடுகளின் சுகாதாரத் திட்டங்களுக்கு அமெரிக்கா பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப் தனது அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நாடுகளுக்கான சுகாதார உதவித் திட்டங்களை அதிகளவில் குறைத்துள்ளார். அமெரிக்காவின் கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பங்களாதேசுக்கான சுகாதார நிதியுதவியானது 79 மில்லியன் டொலராகவும் இந்தியாவிற்கு 53 மில்லியன் டொலராகவும் நேபாளத்திற்கு 41 மில்லியன் டொலராகவும் பாகிஸ்தானிற்கு 22 மில்லியன் டொலராகவும் காணப்பட்டன. ஆனால்ட் ரம்ப் நிர்வாகம் இந்த உதவித் திட்டத்தை சரி அரைவாசியாகக் குறைத்துள்ளது.

அமெரிக்காவானது தென்னாசிய நாடுகளுக்கான சுகாதார உதவித் திட்டத்திற்கான நிதியைக் குறைப்புச் செய்துள்ளதானது இந்த நாடுகளில் பல்வேறு எதிர்த்தாக்கங்களை உண்டுபண்ணும் என்பது ஒரு கெட்டவாய்ப்பாகும். இதனால் இந்த நாடுகளின் சிறுவர் மற்றும் தாய்மார் சுகாதார முன்னேற்றம், போசாக்கு அதிகரிப்பு, காசநோய், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்களை எதிர்த்து நிற்பதற்கான திறனற்ற நிலை உருவாகும்.

அத்துடன் அமெரிக்காவின் இந்த நிதியுதவியானது இதுவரை காலமும் இந்த நாடுகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்கும் ஆதரவாக இருந்தது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நிதியுதவியை சரி அரைவாசியாகக் குறைப்புச் செய்வதால் தென்னாசியா புதிய சவால்களைச் சந்திப்பதற்கு வழிவகுக்கும்.

பூகோள சுகாதாரத் திட்டம் என்பது ஒபாமா நிர்வாகத்தின் மிக முக்கிய வெளிநாட்டு உதவியாகக் காணப்பட்டது. குறிப்பாக இத்திட்டமானது ‘அதிபரின் முயற்சித் திட்டம்’ எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஒபாமா நிர்வாகத்தின் முன்னுரிமைத் திட்டங்களை இல்லாமல் செய்வதே அதிபர் ட்ரம்பின் விருப்பாக உள்ளது. இதற்காகவே தற்போது கடந்த காலத்தில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை இதன் புதிய நிர்வாகம் இல்லாதொழித்து வருகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய வரவு செலவுத் திட்டமானது மாலைதீவு மற்றும் சிறிலங்காவிற்கான உதவிகளை முற்றிலும் முடிவிற்குக் கொண்டு வரும். மாலைதீவானது நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடு. இது ஜனநாயக ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. குறிப்பாக இங்கு 100 சதவீதமும் சுனி முஸ்லீம்களே வாழ்கின்றனர். ஆனால் தீவிரவாதம் என்பது இங்கு பெரும் பிரச்சினையாகக் காணப்படுகிறது.

இந்திய மாக்கடலில் அமைந்துள்ள மாலைதீவானது அதிகரித்து வரும் கடல் மட்டத்தால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்காவின் இரண்டு மில்லியன் டொலர் உதவி புதிய வரவு செலவுத் திட்டத்தில் முற்றாக நீக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாலைதீவிற்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் உதவியானது சமாதானம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை மையப்படுத்தியே வழங்கப்பட்டது.

காலநிலை மாற்றத்திற்கு நிதி வழங்குவதை ட்ரம்ப் நிர்வாகம் முற்றிலும் எதிர்த்துள்ளமை அனைவரும் அறிந்ததே. எனினும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மாலைதீவிற்கு அதன் பாதுகாப்பு மற்றும் சமாதானம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்ட சிறியளவிலான உதவித் தொகையை ட்ரம்ப் நிர்வாகம் இல்லாமல் செய்தமையானது இந்த நிர்வாகத்தால் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகக்கு முரணாக காணப்படுகிறது.

மாலைதீவிற்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட சிறியளவிலான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்துவதால் ‘எமது சொந்தப் பாதுகாப்பு குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது’ என பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்வான நடுத்தர வருமானத்தைக் கொண்டதும் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திலிருந்து 2009ல் மீண்டெழுந்த நாடான சிறிலங்காவிற்கான 38 மில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்காவின் நிதியுதவியானது நிறுத்தப்படவுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, சமாதானம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை மையப்படுத்தியே இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

சிறிலங்கா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் இந்திய மாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் மிக்க மையத்தில் அமைந்துள்ளன. இந்திய மாக்கடல் முழுவதிலும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய மாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ள சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுடனும் சீனா பல்வேறு பாரிய இராஜதந்திர மற்றும் பொருளாதார பங்களிப்பை வழங்கி வருகின்றது.

USS New Orleans  (2)

இந்தியாவுடனான ஒத்துழைப்பில் தோல்வியடைதல்:

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவிற்கு அமெரிக்காவால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்துள்ளது. அமெரிக்காவின் 2017 நிதியாண்டில் 76 மில்லியன் டொலர் இந்தியாவின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. அமெரிக்காவின் 2012 நிதியாண்டு தொடக்கம் 2013 நிதியாண்டு வரை இந்தியாவிற்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியுதவியானது 80 மில்லியன் டொலராகக் குறைக்கப்பட்டது.

தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் இந்த உதவியானது முற்றிலும் நிறுத்தப்படவுள்ளது. இந்தியாவின் சுகாதார உதவித் திட்டத்திற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியுதவி சரி அரைவாசியாகக் குறைக்கப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரமானது அண்மைய ஆண்டுகளில் துரித வளர்ச்சியடைந்த நிலையில் இதன் பொருளாதாரம் வளர்ச்சியுற்று வருகிறது.

இதனால் அமெரிக்காவும் இந்தியாவும் புத்தாக்கங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கேற்ற வகையில் இந்தியாவுடனான அமெரிக்காவின் பொருளாதார உதவித் திட்டம் அமெரிக்காவின் கடந்த நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டது.

இந்தியாவானது சமூகப் பொறுப்பு மற்றும் முதலீடு போன்ற பல்வேறு விடயங்களிலும் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு வரும் ஒரு நாடாக வளர்ச்சியடைந்து வருவதால் இந்த நாட்டிற்கான உதவித் திட்டங்களை அமெரிக்கா குறைப்பதன் மூலம் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பான அறிவை நாம் பெற்றுக் கொள்வதற்கான கதவு மூடப்படும் என பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேசிற்கான உதவித் திட்டம்:

அமெரிக்காவால் இதுவரை காலமும் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் பங்களாதேசிற்கு வழங்கப்பட்டு வந்த 91 மில்லியன் உதவி அமெரிக்காவின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் நிறுத்தப்படுவதுடன் பொருளாதார ஆதரவு நிதியத் திட்டத்தின் கீழ் பங்களாதேசிற்கு 95 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. சீனாவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது புடைவை ஏற்றுமதி நாடாக விளங்கும் பங்களாதேசிற்கான நிதியுதவியை அமெரிக்கா தொடர்ந்தும் பாதுகாப்பதானது நல்வாய்ப்பாகும். பங்களாதேஸ் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பதில் சவாலைச் சந்தித்து வருகிறது. பாரம்பரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பங்களாதேசின் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்றவற்றுக்காக அமெரிக்காவால் வழங்கப்பட்ட நிதியுதவியானது பங்களாதேஸ் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்த போதும் பல்வேறு சாதகமான விளைவுகளை வெளிப்படுத்தியதாக பிஸ்வால் தெரிவித்தார்.

 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு விவகாரங்கள்:

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தற்போதும் யுத்தம் இடம்பெறுகின்றது. இவ்விரு நாடுகளுக்கும் அமெரிக்காவின் பொருளாதார ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் ட்ரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியானது பொருளாதார ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் 20 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதாவது இந்த நிதியுதவி 650 மில்லியன் டொலராகக் குறைக்கப்படும். பாகிஸ்தானிற்கான நிதியுதவி 200 மில்லியன் டொலராக வழங்கப்படும்.

ஆப்கானிஸ்தானிற்கான பொருளாதார ஆதரவு நிதித் திட்டத்தில் குறைப்புச் செய்யப்படவுள்ளமை இந்த நாட்டில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை எவ்வாறு பாதிப்படையச் செய்யும் என்பதைத் தற்போது மதிப்பிட முடியாதுள்ளது. இப்பிராந்தியத்தின் மிகவும் ஏழ்மையான நாடாக ஆப்கான் விளங்குகிறது. அத்துடன் இங்கு யுத்தம் இடம்பெறுகிறது. ஆகவே அமெரிக்காவால் வழங்கப்படும் ஒவ்வொரு டொலரும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுச்சேர்க்க உதவும். ஆகவே இந்த நாட்டில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் இராணுவ மூலோபாய நடவடிக்கை முடிவடைவதற்கு முன்னர் பொருளாதார உதவித் தொகையை அமெரிக்கா குறைப்பதானது எதிர்த்தாக்கத்தை உண்டுபண்ணலாம்.

முன்னுரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்:

ட்ரம்பின் புதிய நிர்வாகமானது தனது வெளியுறவுக் கோட்பாட்டின் கீழ் பிற நாடுகளுக்கான பொருளாதார உதவிகளைக் குறைப்புச் செய்வதானது இந்த நாடானது ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள் போன்ற விழுமியங்களை குறைத்து மதிப்பிடுவதையே சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கா இவ்வாறு தனது உதவித் திட்டங்களைக் குறைப்புச் செய்வதன் மூலம் மத்திய ஆசியாவில் சீனாவால் தொடருந்துப் பாதைகள் மற்றும் வீதிகள் அமைக்கப்படுவதன் மூலமும் தென்னாசிய நாடுகளான சிறிலங்கா மற்றும் மாலைதீவு போன்ற கேந்திர முக்கியத்துவ அமைவிடத்தைக் கொண்ட நாடுகளில் சீனா தொடர்ந்தும் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்குமான வாய்ப்பு மேலும்  அதிகரிக்கப்படுகிறது.

ஆகவே இதனைத் தடுப்பதற்கு அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சி போன்றவற்றில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். இதேபோன்று இந்தியாவிற்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களை இல்லாமல் செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் இந்தியாவின் வளர்ச்சி எத்தகையது என்பதை அறிவதற்கான வாய்ப்பை அமெரிக்கா இழக்கும்.

இதேபோன்று பங்களாதேசிலும் இதுவரை காலமும் வெற்றி பெற்ற கல்வி, உணவுப்பாதுகாப்பு போன்ற திட்டங்களை அமெரிக்கா கைவிடுவதன் மூலமும் தென் மற்றும் மத்திய ஆசியாவின் மிகவும் வறுமைக்குட்பட்ட இரண்டாவது நாடாக விளங்கும் நேபாளத்திற்கான உதவித் திட்டத்தை அமெரிக்கா மூடுவதன் மூலமும் பல்வேறு சவால்கள் தோன்றும். இதேபோன்று ஆப்கானின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டாலும் கூட, இவை எவையும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போவது போல் தோன்றவில்லை.

வழி மூலம்      – Forbes
ஆங்கிலத்தில்  – Alyssa Ayres
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *