மேலும்

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

major general udaya pereraசிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் பணியில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கந்தானையில் உள்ள மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் சமையல்காரராக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கோப்ரல் செனிவிரத்ன மர்மமான முறையில் மரணமாகியுள்ளார்.

கடந்த 6ஆம் நாள், கெக்கிராவவில் உள்ள கோப்ரலின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் சிலர், அவர் வாகன விபத்தில் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது தந்தை மற்றும் இருவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், அவர்களை ராமக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், ராமக பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று, கோப்ரல் செனிவிரத்ன தற்கொலை செய்து கொண்டதாக சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதனை ஒரு விவகாரம் ஆக்காமல் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு மேஜர் ஜெனரல் உதய பெரேரா கூறியிருக்கிறார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த கோப்ரலின் சகோதரர் கந்தானை காவல் நிலையத்தில் முறையிட்ட போதும், அந்த முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. ராமக மருத்துவமனையில் தாம் மிரட்டப்பட்டதாகவும் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சடலத்தை கெக்கிராவவுக்கு கொண்டு வந்த உறவினர்கள், கெக்கிராவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து, நீதிவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சடலம் தற்போது அனுராதபுர மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை வரும் 20 ஆம் நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *