மேலும்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்

major general shavendra silvaபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ள எழிலன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளில் போர் முடிவுக்கு வந்த பின்னர், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன முன்னிலையாகி சாட்சியமளித்தார்.

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள், தனக்குத் தெரியாது என்றும், அது அப்போதைய 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே தெரியும் என்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளரான ரட்ணவேல், நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அரசதரப்பு சட்டவாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். இந்த வழக்கிற்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் தொடர்பில்லை என்று கூறி அவரை நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பாணை விடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும், இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனிடம் விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, அதன் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று சட்டவாளர் ரட்ணவேல் வலியுறுத்தினார்.

இருதரப்பும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்ததையடுத்து, இந்த வழக்கை ஏப்ரல் 27ஆம் நாளுக்கு ஒத்திவைத்த நீதிவான் சம்சுதீன், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுவதா என்பது குறித்து அன்றைய தினம் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *