மேலும்

உண்மையான போர் வீரர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

maithriஉண்மையான போர் வீரர்களை போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்போம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

குருநாகல பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,

“ஜனநாயகம், அமைதி,மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்துக்கு எதிராக உண்மையாகப் போராடிய, போர் வீரரையும் எந்தவொரு அனைத்துலக நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

சில தரப்புகளால் கூறப்படும் எந்தவொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரிலும், எந்தவொரு போர் வீரரும், எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டமாட்டார்கள்.

ஒரு பொதுமகன் என்ற அடிப்படையிலும், நாட்டின் அதிபர் என்ற வகையிலும் நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களின் நலன்களுக்காக நான் எப்போதும், செயற்படுவேன்.

ஆனால், ஆயுதப்படைகளில் இருந்து கொண்டு கண்டபடி கொலைகளையும், கடத்தல்களையும், அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான கொடுமைகளையும் இழைத்தவர்கள், எந்த பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

உண்மையான போர் வீரர்கள் எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்வதற்கு இடமளிக்கமாட்டேன். ஆயுதப்படைகளின் கௌரவத்தையும், மதிப்பையும் பாதுகாக்க சாத்தியமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தமது நாடுகள் எப்போதும் சிறிலங்காவினதும் அதன் ஆயுதப்படைகளினதும் பக்கம் நிற்கும் என்று சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் எனக்கு உறுதி அளித்துள்ளார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *