மேலும்

அஜித் டோவல் மீது சீறும் கோத்தா – ஆட்சி மாற்றத்துக்கு தூண்டியவராம்

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colomboஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் சீனா தொடர்பான இறுக்கமான நிலைப்பாடு தான், 2014இல் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியாவைப் பணியாற்றச் செய்தது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எழுதிய நூல் மிகச் சிறந்தது. அதில் கூறப்பட்டுள்ளது போன்று,  காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பின்னர், சீனா விவகாரம் முன்னரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

சீனாவின் முதலீட்டிலான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறும், கொழும்பு துறைமுகத்தில் தெற்கு கொள்கலன் முனையத்தை சீனர்களிடம் இருந்து திரும்பப் பெறுமாறும் இரண்டு தடவைகள் அஜித் டோவல் என்னிடம் கூறினார்.

புலனாய்வுச் சேவையில் இருந்த போது, அஜித் டோவல் சீனாவைச் சுற்றியே செயற்பட்டார். சிவ்சங்கர் மேனன் ஒரு இராஜதந்திரியாக செயற்பட்டார்.  டோவல் ஒரு புலனாய்வாளராகவே செயற்படுகிறார்.

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colombo

இந்தச் சூழலில், 2014ஆம் ஆண்டு சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கொழும்பு வந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் பதற்றத்தை உருவாக்கின.

அது ஒரு அணுசக்தி நீர்மூழ்கி அல்ல என்பது முதலாவது விடயம். இரண்டாவது, சீன நீர்மூழ்கியின் பயணம் இரகசியமானது என்பது உண்மையல்ல.

கிழக்கில் இருந்து மேற்கிற்கும், பின்னர் மேற்கில இருந்து கிழக்கிற்குமான கப்பல்களின் பயணங்கள் மற்றும் அதன் பாதைகள் தொடர்பான தகவல்கள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.சிறிலங்கா அரசாங்கத்தின் முன் அனுமதி பெற்றே இந்தப் பயணங்கள் இடம்பெற்றன.

புதுடெல்லியின் உணர்வுகள் கொழும்புக்குத் தெரியும்.  இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்துவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நாம் கூறியிருந்தோம். ஆனால் இந்தியா அதனை நம்பவில்லை.

இப்போதைய சிறிலங்கா அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ள நிலையில், இந்தியா மௌனம் காப்பது கபடத்தனமானது.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது ஆபத்தானது. இதுகுறித்து இந்தியா அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *