மேலும்

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

Sushma-Swarajபோரின் போது, நிராயுதபாணிகளான தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படையினர் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா கவலையையும், வலியையும் உணர்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, அண்டைநாடான சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை வேதனையுடன் எழுப்பியுள்ள உறுப்பினர்களுடன் அதே வலியுடன், அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதே, எமது நோக்கம்.

இதனை கட்டாயப்படுத்தி  அல்லது, நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு என இரண்டு வழிகளில் அடைய முடியும்.

இந்தப் பிரச்சினை எழுந்து கொண்டிருக்கும் போது, ஒருமித்த நிலையை உடைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அதனுடன் இணைந்து செல்வோம்.

முன்னைய அரசாங்கங்கள் இலங்கைத் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு பிரச்சினை எழுப்பியிருந்தன. ஆனால், எந்தவொரு இருதரப்பு கூட்டங்களிலும், இந்த விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டதில்லை.

திரும்பத் திரும்பக் கொண்டு வரப்படுவதால், இலங்கைத் தமிழர்களின் கரிசனை தொடர்பான தீர்மானம் குறித்து எமக்கு திருப்தியில்லை.

ஐ.நா ஒரு காலவரம்பை நிர்ணயித்துள்ளது, அதற்குள் சிறிலங்கா தனது கடப்பாட்டை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் அணுகுமுறையானது, ஆக்கபூர்வமானதும், ஒத்துழைப்பு இணக்கப்பாட்டுடனும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள சிறிலங்கா, இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளது.

ஒரு பக்கத்தில் இது ஒரு நம்பிக்கை. மற்றொரு பக்கத்தில் ஐ.நாவின் முன்பாக அளித்துள்ள வாக்குறுதியாகும்.

அங்கு சில சாதகமான மாற்றங்கள் கூட நிகழ்ந்துள்ளன. அதில் மிகப் பெரியது, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சியின் தலைவர் இருக்கிறார்.

சிறிலங்கா, இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு. அந்த நாட்டின் முன்னேற்றங்களில் இந்தியா ஈடுபாடு காட்டாமல் இருக்க முடியாது.

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் சமத்துவம், பாதுகாப்பு, நல்லிணக்கத்துடனும்,  செழிப்பு, மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலும்,  இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் உள்ளடக்கிய,  பல மொழி, பல இன மற்றும் பல மத குணாம்சத்தை பாதுகாக்கும்  சிறிலங்காவின் முயற்சிகளை இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது.

மதிநுட்பத்துடனும், அதன் தலைமைத்துவத்தின் அரசியல் விருப்புடனும், மக்களின் ஆதரவுடனும், சிறிலங்கா உண்மையான நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் அடையும் என்று நம்புகிறோம்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையைத் தழுவியதாகவும், காலவரம்புடன் கூடிய இடைக்கால நீதிக்கான விரிவான மூலோபாயம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *