மேலும்

கீத் நொயாரை கடத்திய மேஜர் புலத்வத்தவுக்கு இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா

gotaஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கபில ஹெந்தவிதாரணவுமே இவருக்கு உயர்மட்ட இராஜதந்திரப் பதவியை வழங்கப் பரிந்துரைத்திருந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்சவும் போட்டியிட்ட அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, 2010 ஜனவரி மாதம், மேஜர் பிரபாத் புலத்வத்தவுக்கு இராஜதந்திரப் பதவி வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மேஜர் புலத்வத்தவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, நுழைவிசைவு மற்றும் விமானப் பயணச்சீட்டுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன.

எனினும், 2010 பெப்ரவரி நடுப்பகுதியில்,  அவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்வதை காலவரையின்றி சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திடீரென இடைநிறுத்தியது.

2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட  சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக மேஜர் புலத்வத்தவின் கீழ் செயற்பட்ட கன்னேகெதர பியவன்ச என்ற இராணுவ சிப்பாய் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேள்வி எழுப்பியதையடுத்தே, இந்த திட்டம் மாற்றப்பட்டது.

அப்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து அந்த விசாரணை திடீரென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

தற்போது, இந்த விசாரணை மாற்றப்பட்டதற்கான சூழல் மற்றும் மேஜர் புலத்வத்தவின் வெளிநாட்டுப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான சூழல் என்பன குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

மேஜர் புலத்வத்த தலைமையிலான இராணுவ அணியினர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையிலும் தொடர்புபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *