மேலும்

முப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – பலாலியில் சிறிலங்கா அதிபர் உறுதி

maithri-palali (1)சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்துக்கு முதல்முறையாக அதிகாரபூர்வ பயணத்தை நேற்று மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதனையடுத்து பலாலியில் உள்ள விமானப்படையின் தரிப்பிடத்தில், படையினர் மத்தியில் உரையாற்றினார்.

முப்படைகளையும் சேர்ந்த 4000 படையினர் மத்தியில் அவர் உரையாற்றிய போதே,  படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தாம் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

maithri-palali (1)maithri-palali (2)

அவர் தனது உரையில், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் கருத்துக்களின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்ய நான் தயாராக இல்லை.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்றலுடன், ஆயுதப்படைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு அவர்கள் கோருகிறார்கள். நாம் அதனைச் செய்யத் தயாராக இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

தமது கடமையை பொறுப்பை சரியாகச் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம், பெருமளவு டொலர்களையும் பவுண்ட்ஸ் களையும்  பெற்றுக் கொண்டு, பாதுகாப்புப் படைகள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

அனைத்துலக தொடர்புகளின் மூலம், அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போல ஆட்சியை நடத்த நான் தயாராக இல்லை. அவர்கள் கோருவது போன்று முப்படைகளுக்கும் எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய நான் தயாராக இல்லை. இதில் தெளிவாக இருக்கிறேன். நான் எனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன்.

நாட்டின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். நான்முப்படைகளின் பிரதம தளபதியாக இருக்கும் வரையில், போர் வீரர்களின் கௌரவத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *