மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கான பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்ய சிறிலங்கா முயற்சி

mangala-unhrcஜெனிவாவில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்ற விடயத்தை நீ்ர்த்துப் போகச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015 ஒக்ரோபரில், நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் அளித்து, இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், 30/1 தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை இடம்பெற்றுள்ள நிலையில், அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போருடன் தொடர்புடைய விசாரணைப் பொறிமுறை வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன், உருவாக்கப்பட்ட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை குறைப்பற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, கலப்பு விசாரணையை உருவாக்கவோ போவதில்லை என்று சிறிலங்கா அதிபரும், பிரதமரும், கடந்தவாரம் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் சிறிலங்கா இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க வேண்டும் என்ற பரிந்துரையை, இம்முறை கொண்டு வரப்படும் தொடர்ச்சித் தீர்மானத்தில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்பில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு நீக்க முற்பட்டால், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் மத்தியில் பிளவு ஏற்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *