மேலும்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு

tnaஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக காலஅவகாசம் வழங்குமாறு தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம், கோரிக்கை விடுக்கவுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்கா அரசுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேலதிக காலஅவகாசத்தை வழங்கக் கூடாது என்று கூட்டமைப்பின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்கக் கூடாது என்று கோரி, கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு ஏற்கனவே காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  மேலதிக காலஅவகாசம் வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எஸ்.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கே.கோடீஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், சிவசக்தி அனந்தன் ஆகிய எட்டு உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவில்லை.

அதேவேளை, சிறிலங்கா மேலதிக காலஅவகாசம் கோரினால், கடுமையான நிபந்தனைகளுடனேயே அது வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரியுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படுவதே, இங்கு முக்கியமானது. சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதைப் புரிந்துகொள்ளாதவர்களே, தேவையற்றுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய  அரசாங்கத்தின் கீழாவது, தமிழ் மக்களின் ​பிரச்சினைக்குத் தீர்வு காணவே நாம் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *