மேலும்

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

jaishankar-sampanthanஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தனது அணுகுமுறையையும் மீள ஆராய்வதற்கான தக்க தருணமாக அமைந்திருக்கும்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார். சிறிலங்காவின் வடக்கிற்கும் பிரதமர் மோடி பயணம் செய்தமையானது தமிழ் மக்கள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருந்தது.

பிரதமர் மோடி சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது, அதிகாரப் பகிர்வு, 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அரசியல் யாப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் விளக்கியிருந்தார்.

இவ்வாண்டிலும் இந்தியப் பிரதமர் மோடி சிறிலங்காவிற்கு மீண்டும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் கொழும்பிற்கு பயணம் செய்திருந்தார். இவர் இந்தப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழர் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

‘இந்திய வெளிவிவகாரச் செயலரின் அண்மைய சிறிலங்காவிற்கான பயணமானது ஊடகங்களால் முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இந்தச் செய்தியானது ஊடகங்களின் முக்கிய செய்தியாக அமையவில்லை’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

TNA-jaishangar

‘ஜெய்சங்கரின் அண்மைய பயணத்தின் போது சிறிலங்கா மீது இந்தியா அதிகம் அழுத்தம் கொடுத்ததாக நான் கருதவில்லை. ஏனைய அனைத்துலக நாடுகளைப் போலவே,  சிறிலங்கா தனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியாவும் மேலும் கால அவகாசத்தை வழங்கியிருந்தது. அம்பாந்தோட்டையில் சீனாவினால் பொருளாதார வலயம் அமைக்கப்படவுள்ளமை போன்ற தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள விடயங்கள் தொடர்பாக மட்டுமே சிறிலங்கா மீது இந்தியா, அழுத்தம் கொடுக்கிறது’ என ஜெகான் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

இந்திய நாடாளுமன்றில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள நிலையில், சிறிலங்காவுடனான மீனவர் பிரச்சினை தற்போதும் தீர்க்கப்படாத விடயமாகவே காணப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடமிருந்து முடிந்தளவு விலகி நடக்க வேண்டுமானால், இந்தியா தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை சிறிலங்கா கொண்டுள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.

ஆனாலும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயல்பு வாழ்வை மீளவும் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவானது தனது நாட்டில் நீதிப் பொறிமுறையை நிலைநாட்டுவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் இதனை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது தொடர்பாக தற்போது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தன் மீதான போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு, அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பின் புதிய அரசாங்கம்,  உதவி செய்யும் என அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கூட்டணி அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆகவே சிறிலங்காவில் அதிகாரப் பகிர்வு மாற்றம் ஏற்படுவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கலாம்.

வழிமூலம்       – The diplomat
ஆங்கிலத்தில்  – Taylor Dibbert
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *