மேலும்

சிறிலங்காவை விட்டு இந்தியாவை விலகச் சொல்லும் சீனா

india-chinaதென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது,  இந்தியாவை அதன் கொலனியான சிறிலங்காவை விட்டு விலகியிருக்குமாறு கூறுவதன் மூலம், இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை சீனா நிலைநிறுத்தி வருகிறது.

ஆசியாவின் இரு பெரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாட்டை தென்கிழக்காசிய சந்தைகளின் முதலீட்டாளர்கள் தமது கவனத்திற் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. ஏனெனில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் பூகோள அரசியல் ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால் இது தொடர்பில் முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தமிழ்ப் புலிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக 2007ல் இராணுவ மற்றும் இராஜதந்திர சார் உதவிகளை வழங்கியதிலிருந்து சிறிலங்கா மீதான சீனாவின் கொலனித்துவம் ஆரம்பமாகியது.

இதனைத் தொடர்ந்து சிறிலங்காவில் பல்வேறு பாரிய கட்டுமாணத் திட்டங்களை மேற்கொள்வதற்கு உயர் வட்டி வீதத்துடன் கூடிய கடன்கள் சீனாவினால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டன. இக்கடனை சிறிலங்காவினால் திருப்பிச் செலுத்த முடியாததால் தனது துறைமுகம் ஒன்றை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இத்துறைமுகமானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய மையமாக உள்ளது.

இந்தியாவைச் சீனா சுற்றிவளைக்கின்றது என்பது இந்தியாவிற்கு ஒரு கெட்ட செய்தியாகும். ‘இந்தியாவிற்கருகிலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகங்களில் சீனா கால் பதிப்பதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என அமெரிக்காவின் வெளிவிவகார இராஜதந்திரியான ஜெப் எம் ஸ்மித் எழுதியுள்ளார்.

சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகத்தைத் தனது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான எவ்வித திட்டமுமில்லை என சீனா மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளது.

ஆனால் கடந்த கால நிகழ்வுகள் இதனை உறுதி செய்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சில தடவைகள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன. இதனை இந்தியா பலமாக எதிர்த்தது.

‘இந்தியாவைப் பொறுத்தளவில், சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் திடீரெனத் தரித்து நின்ற சம்பவம் தாங்கிக்  கொள்ள முடியாததாகக் காணப்படுகிறது.

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல்களில் 70 சதவீதம் இந்தியாவிற்குச் சொந்தமானதாகும். இந்நிலையில் சீனா சிறிலங்காவில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக புதுடில்லி மிகவும் அதிருப்தியுற்றுள்ளது’ என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நின்று ஒரு சில வாரங்களின் பின்னர் ராஜபக்சவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது, கடல் சார் உடன்படிக்கையின் கீழ் இவ்வாறு வேற்று நாட்டுக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பாக சிறிலங்கா தனது அயல்நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக நினைவுபடுத்தினார்.

ஆனால் அதே நீர்மூழ்கிக்கப்பல் மீண்டும் நவம்பர் 2014ல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது இந்தியா மேலும் அதிர்ச்சியுற்றது.

தனது கொலனித்துவமான சிறிலங்கா தொடர்பில் தான் எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளேன் என சீனா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. அதாவது சீனா, சிறிலங்காவில் இரு வேறுபட்ட விடயங்களை மேற்கொள்ளவுள்ளது.

ஆகவே இந்தியா, சீனாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது சீனாவின் திட்டத்திற்கு ஏற்ப இந்தியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வழிமூலம்       – Forbes
ஆங்கிலத்தில்  – Panos Mourdoukoutas
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *