மேலும்

சிறிலங்காவில் சீனாவின் நலன்களை கெடுக்கிறது இந்தியா – சீன அரசு நாளிதழ் குற்றச்சாட்டு

Chinese_flagசிறிலங்காவில் சீனாவின் நலன்களுக்கு எதிராக இந்தியா செயற்படுவதாக, சீன அரசின் நாளிதழான குளோபல் ரைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பீஜிங்கின் முதலீட்டிலான துறைமுகத் திட்டத்தில் தலையீடு செய்வதன் மூலமே, சீனாவின் நலன்களுக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும், இந்தியப் பெருங்கடலில், தனது செல்வாக்கு பறிபோகும் என்ற கவலையே இதற்குக் காரணமும் என்றும், குளோபல் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் எந்த துறைமுகத்திலும், இராணுவத் தளங்களுக்கான வசதிகளை அமைப்பதற்கு, சீனாவுக்கு இடமளிக்கப்படாது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு கடந்த வாரம் ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.

சிவிலியன் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட வசதிகளை, இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சீன முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக உறவுகளுக்கான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூ யின்  ‘சிறிலங்காவின் இந்த வாக்குறுதி தேவையற்றது. ஏனென்றால் துறைமுகம் என்பதன் அர்த்தம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கானதே. சிறிலங்காவின் விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று  தெரிவித்துள்ளார்.

“ஒரு பாதை ஒரு அணைத் திட்டமானது, நாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சிவிலியன் திட்டங்களையே உள்ளடக்கியது. உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் போது இந்த நாடுகளின் பாதுகாப்புக் கரிசனைகளை சீனா மதிக்கிறது.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்களை ஊக்குவிக்கும் போதெல்லாம், தனது அண்டை நாட்டை சிறிலங்கா திரும்பத் திரும்ப அமைதிப்படுத்த வேண்டியிருக்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் குறித்த சிந்தனையிலேயே இந்தியா ஆழ்ந்துள்ளது.

இந்தியாவைப் புண்படுத்தும் எண்ணம் சீனாவுக்கு இல்லை, இந்த திட்டத்தினால் சிறிலங்காவின் அபிவிருத்திக்கே நன்மையானது. எனினும், திட்டத்தினால் இந்தியாவுக்குப் பிரச்சினை என்றால், அதன் அண்டை நாட்டை துன்புறுத்துகிறது.

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்கிறது என்பதையே இது காட்டுகிறது.” என்றும் யின் குறிப்பிட்டார்.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு முதலில் இந்தியாவின் உதவியைத் தான் சிறிலங்கா கோரியது, எனினும், நிதி நெருக்கடியாலும், தனது சொந்த துறைமுகங்களின் எதிர்கால போட்டி குறித்த கரிசனையாலும், இந்தியா நிராகரித்து விட்டது. அதன் பின்னரே, இந்த திட்டம் சீனாவின் பக்கம் திரும்பியது என்று பியூடான் பல்கலைக்கழக அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த லின் மின்வாங் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குளோபல் ரைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள மற்றொரு கட்டுரையில், சிறிலங்காவுடன் சீனா உறவுகளைப் பலப்படுத்தும் போது, இந்திய கவலைப்படுவது இயற்கையே என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபாதை ஒரு அணைத் திட்டத்தின் முக்கிய புள்ளியாக சிறிலங்கா உள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றைய ஒட்டியதாக அமைந்துள்ள சிறிலங்காவில், சீனா தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது.

சிறிலங்காவுக்கு உதவும் வகையில் சீனா முதலீடு செய்துள்ள சில திட்டங்கள், தெற்காசியாவின் புவிசார் அரசியல் பரப்பில் மூலோபாய நலன்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சீனாவும் சிறிலங்காவும், உறவுகளைப் பலப்படுத்தும் போது, பிராந்தியத்தில், புரிந்துணர்வுடனான அதிகாரச்சமநிலை ஒன்றைப் பேண இந்தியா விரும்புகிறது.

சிறிலங்காவுடனான  பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த சீனா எதிர்பார்க்கிறது.

இந்தியப் பெருங்கடலில்  பீஜிங் இராணுவ நோக்கங்களைக் கொண்டிருக்கிறது என்று பரவும் அடிப்படையற்ற வதந்திகளால், நாடுகளைக் குழப்புவதாக உள்ளது என்றும், அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *