மேலும்

நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை

N.Ravirajபாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகளில் ஜூரி சபையின் விசாரணை பொருத்தமற்றது என சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘பாதுகாப்புப் படையினர்  பிரதிவாதிகளாகவும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ள வழக்குகளை விசாரணை செய்யும் ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கப்படுவது தவறானது. ஆகவே இவ்வாறான வழக்குகளில் நீதிபதி தீர்ப்பை வழங்கும் உச்ச நீதிமன்ற விசாரணைக்குச் செல்வதே சிறந்தது’ என சுமந்திரன் தெரிவித்தார்.

ஜூரி சபையால் தீர்ப்பு வழங்கப்படும் போது அதற்கான காரணங்களை வெளியிட வேண்டிய தேவையிருக்காது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கும் போது அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். இதில் மூன்று நீதிபதிகள் அங்கம் வகிப்பார்கள்.

‘சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கள மொழியில் அல்லது தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் பேசும் ஜூரியை அமர்த்துவதற்கான ஏற்பாடு காணப்படுகிறது.

இது குறிப்பாக சமூகவியல் குற்றங்கள் அல்லது அரசியல் ரீதியான வழக்குகளுக்கும் தீர்ப்புக்களைப் பெறப் பயன்படுத்த முடியும்’ என சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை – குமாரபுரத்திலுள்ள கிளிவெட்டி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 26 அப்பாவிப் பொதுமக்கள் 11 பெப்ரவரி, 1996ல் ஆறு இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையானது குமாரபுரம் படுகொலை என அழைக்கப்படுகிறது. இப்படுகொலையில் ஆறு பெண்கள் மற்றும் 13 சிறுவர்கள் உட்பட 26பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மூதூரில் இடம்பெற்றது. இப்படுகொலையை நேரில் கண்டவர்கள் இப்படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்தினரை அடையாளங் காண்பித்தனர். இந்த இராணுவத்தினர் திருகோணமலை – தெகிவத்தை இராணுவ முகாமிலேயே பணியாற்றியிருந்தனர்.

போர்ச் சூழல் காரணமாக இந்த வழக்கானது சிங்களப் பிரதேசத்திலுள்ள அனுராதபுரம் உயர் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. இங்கு 20 ஆண்டுகளின் பின்னரே வழக்கு ஆரம்பமானது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 101 வெவ்வேறு குற்றங்களுக்காக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் ஜூலை 2016ல், ஆறு சிங்களப் பிரதிநிதிகளைக் கொண்ட ஜூரி சபையால் இவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர். அனுராதபுர உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரட்ண இந்த ஆறு இராணுவ வீரர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து இவர்களை விடுவித்தார்.

இவ்வாறான வழக்குகளில் குற்றவாளிகள் எவ்வித தண்டனைகளும் வழங்கப்படாது விடுவிக்கப்படுவதானது நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

‘குமாரபுரம் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை அடையாளங் காட்டிய போதிலும் அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதியால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆகவே உள்ளக நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் தெளிவாகச் சுட்டிநிற்கின்றன. அத்துடன் போர்க் குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்பதையும் இது வலியுறுத்தியுள்ளது’ என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தற்போது உயிருடன் வாழ்வோரும் இப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்ததுடன் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றில் மீளவும் தொடரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசால் இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் தற்போதும் இது தீர்வு காணப்படாது நிலுவையில் உள்ளது.

நீதியான தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்த வேண்டிய சிறிலங்காவின் நீதி முறைமையில் பல்வேறு கட்டமைப்பு சார் பிரச்சினைகள் நிலவுவதாக ரவிராஜ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாகத் தோன்றிய சட்டவாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான கொலை வழக்கில் சம்பந்தப்படும் இளநிலை இராணுவ வீரர்கள் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்காத அதேவேளையில் இவர்களுக்கு கட்டளை வழங்கும் பொறுப்பிலிருந்தவர்கள் யார் என அடையாளங் காணப்படாமை சிறிலங்காவின் நீதிமுறைமைக்குள் காணப்படும் சிக்கல்களுள் ஒன்றாகும்.

இவ்வாறான கொலை வழக்குகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலையை மேற்கொண்டவர்கள் யாருடைய கட்டளையின் கீழ் அல்லது கண்காணிப்பின் கீழ் இவற்றை மேற்கொண்டனர் என்பதை அறிய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என ரவிராஜ் கொலை வழக்கில் வழக்குத் தாக்கல் செய்த ரவிராஜ் குடும்பத்தினர் சார்பாக வாதாடிய சட்டவாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

கட்டளை வழங்குவோர் தனக்குக் கீழுள்ள ஒருவர் தவறு  செய்யும் போது அதனைத் தடுக்காது அல்லது தண்டிக்காது விட்டால், அந்தச் செயலுக்கு கட்டளை வழங்குபவரே பொறுப்பாளி ஆவார். ஆனால் சிறிலங்காவில், இவ்வாறான குற்றங்கள் இடம்பெறும் போது அதற்குக் கட்டளை வழங்கியவர்கள் அடையாளம் காணப்படுவதோ தண்டிக்கப்படுவதோ இல்லை என சட்டவாளர் தெரிவித்தார்.

ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக மார்ச் 2017ல் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவில் அநீதி இழைக்கப்படுவதாக நோக்கப்படுமா என சுமந்திரனிடம் வினவியபோது, போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் கோரிக்கையை இது மேலும் பலப்படுத்தும் என சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த வழக்குத் தொடர்பில் சட்டமா அதிபர் அதிபர் திணைக்களம் நடந்து கொண்ட முறையானது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் சிறிலங்காவில் இடம்பெறும் விசாரணைகளில் நீதியைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன என்பது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முன்னுரிமைப்படுத்தப்படும் என தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்  – PK Balachandran
வழிமூலம்        – New Indian Express
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>