தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படைப் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட சிறிலங்கா விமானப்படைத் தளபதி கடந்த வாரம் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, பெங்களூரு விமானப்படைத் தளத்துக்கு சென்றிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு பொறிமுறைகளையும் ஆய்வு செய்தார்.
சிறிலங்கா விமானப்படைத் தளபதி, உலங்குவானூர்தியை செலுத்தும், தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்யும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா விமானப்படைக்கு, தேஜஸ் போர் விமானங்களை விற்பனை செய்வதில் இந்தியா ஆர்வம்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.