மேலும்

வான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது

aircraft-part-1மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை களுவாஞ்சிக்குடி- களுதாவளைக் கடற்கரையில் இந்த உலோகப் பொருள் கரையொதுங்கியிருந்ததைக் கண்ட, மீனவர்கள் சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இந்த உலோகப்பொருளை மீட்டு, மேலதிக ஆய்வுகளுக்கான திருகோணமலை விமானப்படைத் தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக, திருகோணமலை பாசிக்குடா கடலில் இந்த உலோகப் பொருள் மிதப்பதைக் கண்ட மீனவர்கள் கடற்படையினருக்கு தெரிவித்தனர்.

எனினும், குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தேடுதல் நடத்தியதாகவும், எந்தப் பொருளும் சிக்கவில்லை என்றும், கடற்படையினர் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் இந்த உலோகப்பொருள் கல்முனை பகுதி கடலில் காணப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகிய போதும், கடற்படையினர் அதனைக் கண்டுபிடிக்கவில்லை.

aircraft-part-1aircraft-part-2aircraft-part-3aircraft-part-4

இந்த நிலையிலேயே இன்று காலை இந்த உலோகப் பொருள் கரையொதுங்கியது. 15 அடி நீளம் கொண்ட இந்த உலோகப் பாகத்தில், துண்டிக்கப்பட்ட நிலையில் வயர் இணைப்புகளும் காணப்படுகின்றன.

இது விமானம் அல்லது விண்கலத்தைச் செலுத்தும் ஏவுகணை ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய மொழியை ஒத்த எழுத்துக்கள் இலக்கங்களும் எழுதப்பட்டுள்ளதால், இது ரஷ்யத் தயாரிப்பு வான்கலம் ஒன்றின் பாகமாக இருக்கக் கூடும்.

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கிச் சென்ற இந்திய விமானப்படையின் ரஷ்யத் தயாரிப்பு அன்ரனோவ் விமானம் ஒன்று அண்மையில் கடலில் காணாமற்போயிருந்தது. அந்த விமானம் விழுந்த இடம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *