மேலும்

சீனாவை நெருங்க முனையும் சிறிலங்கா

ranilசீனாவிடமிருந்து சிறிலங்கா மேலும் இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் எனவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சென்சன் போன்று மாற்றுவது தொடர்பிலும் சீனாவின் உதவியை நாடவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘எம்மிடமுள்ள சீனப் போக்குவரத்து விமானங்கள் சிலவற்றில் நான் பயணம் செய்துள்ளேன். இவை மிகவும் நல்ல பயன்மிக்க விமானங்களாகும். இந்த விமானங்களின் தரம் தொடர்பில் சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆனால் சீன இராணுவப் போக்குவரத்து விமானங்கள் மிகச் சிறந்த விமானங்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த விமானங்களுக்கு நான் எப்போதும் உத்தரவாதம் அளிப்பேன். இவை போன்ற இரண்டு விமானங்களை நாங்கள் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளோம்’ என பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து சிறிலங்கா மேலும் இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்ய விரும்பினால், சீனாவால் புதிதாக வடிவமைக்கப்பட்ட Xian Y-20  என்கின்ற விமானத்தைக் கொள்வனவு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தை சிறிலங்கா கொள்வனவு செய்தால் சீனாவிற்கு வெளியே இந்த விமானத்தை முதன் முதலாகக் கொள்வனவு செய்யும் நாடாக சிறிலங்கா காணப்படும். இது விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவின் பாரிய முதலீட்டுத் திட்டங்களை இடைநிறுத்தியதன் பின்னர் முறிவடைந்த சிறிலங்கா-சீனா உறவில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தும்.

‘பாவனையிலுள்ள இராணுவப் போக்குவரத்து விமானங்கள் வினைத்திறன் மிகக்தாக இல்லாமையால் அவற்றுக்குப் பதிலாக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை சிறிலங்காவிற்கு உள்ளது’ என வான் ஆய்வாளர் பென் மோறெஸ் தெரிவித்தார்.

சீனாவின் நம்பிக்கை மிக்க பறவையான ‘குன்பெங்க்ஷ என்கின்ற பரிபாசைச் சொல்லைக் கொண்ட ‘Y-20’ விமானம் சீனாவின் சொந்தத் தயாரிப்பாகும். அதாவது ரஸ்யா மற்றும் அமெரிக்கா ஆகியன தமக்கான கனரக இராணுவப் போக்குவரத்து விமானங்களை வடிவமைத்துத் தயாரித்த பின்னர் தனக்கான சொந்த விமானத்தைத் தயாரித்த மூன்றாவது உலக நாடாக சீனா உள்ளது. தற்போது தயாரிக்கப்படும் இந்த விமானமானது மிகப் பாரிய இராணுவ விமானம் என்பதுடன் முப்பரிமாண அச்சுத் தொழினுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் முதலாவது சரக்கு விமானமாகவும் இது காணப்படுகிறது. இந்த விமானமானது உத்தியோகபூர்வமாக கடந்த யூலை மாதம் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப் படையினரால் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டது.

‘எமது விமான நிலையங்களில் மேலதிக விமானங்களைத் தரித்து நிறுத்தக் கூடிய வசதி காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றக்கூடிய அதேவேளையில் இராணுவப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இரட்டைப் பயனுள்ள இராணுவ விமானங்களைக் கொள்வனவு செய்ய நாம் முயற்சிக்கிறோம். இவ்வாறான விதிமுறைகளுக்கு இசைவான விமானங்களை   பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பாக நாங்கள் தற்போது சீனாவிடம் கலந்துரையாடி வருகிறோம்’ என பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

போர் விமானங்களை எவ்வாறு கொள்வனவு செய்யவுள்ளார் என்பது தொடர்பாக பிரதமர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இணைந்து தயாரிக்கப்பட்ட ஜே.எப் -17 ரக 12 போர்விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை சிறிலங்கா ஜனவரியில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இந்தியாவின் இராஜதந்திர முயற்சியால் இந்த ஏற்பாடு பின்னர் கைவிடப்பட்டது. இந்தியா தனது சொந்தத் தயாரிப்பான தேஜஸ் விமானத்தை சிறிலங்காவிற்கு விற்பதற்கு முயற்சித்து வருகிறது.

‘சீனா, இந்தியா, சுவீடன் மற்றும் ரஸ்யா ஆகியன தமது விமானங்களைக் கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகிறோம்’ என பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றதைத் தொடர்ந்து சீனாவின் பிரசன்னமானது இப்பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதாக இந்தியா கருதுகிறது. இந்தச் சம்பவமே மகிந்த அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று உருவாவதற்கு இந்தியா திரைமறைவில் பணியாற்றியது.

தேசிய அரசாங்கம் சிறிலங்காவின் ஆட்சிக்கு வந்த கையோடு சீனாவால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் சீனாவின் முதலீடு மேலும் சிறிலங்காவிற்குத் தேவைப்பட்டதாலும் சீனாவின் கடன் சுமையை சிறிலங்காவால் ஈடுகொடுக்க முடியாமையாலும் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மென்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்ட சீனாவின் ஐந்து திட்டங்களில் 1.4 பில்லியன் டொலர் பெறுமதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டமும் ஒன்றாகும். இது தொடர்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் இத்திட்டம் மீளவும் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

‘சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் எந்தவொரு நிதி மையமும் காணப்படவில்லை. இந்த இடைவெளியை கொழும்பு துறைமுக நகரம் ஈடுசெய்யும்’ என பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தின் 88 சதவீதத்தை சீன வர்த்தக நிறுவனத்திற்கு 99 ஆண்டுக் குத்தகைக்கு 1.1பில்லியன் அமெரிக்க டொலரில் வழங்குவதென சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவால் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியில் கட்டப்பட்ட இத்துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தி வைப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகக் காணப்படுவதால் இது வர்த்தக ரீதியான தோல்வித் திட்டமாகும்.

சீனாவைப் பொறுத்தளவில், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்கள் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. ஏனெனில் மிக முக்கிய சீனாவின் கிழக்கு-மேற்குக் கடற்பாதைகளை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் பிரதான பெற்றோலிய ஏற்றுமதியாளர்களுடன் இணைப்பதற்கு சிறிலங்கா கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை என்கின்ற மூலோபாயத் திட்டத்தில் சிறிலங்கா மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சீனா தனது பாரிய மூலோபாய பொருளாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காகவே சிறிலங்காவில் பாரிய நிதி முதலீட்டு கட்டுமாணத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சிறிலங்கா ஆண்டு தோறும் சீனாவிற்கு வழங்க வேண்டிய கடன்சுமையைக் குறைக்க முடியும். சிறிலங்காவின் வெளிநாட்டு கடனான 2010ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் 36 சதவீதமாகவும் கடந்த ஆண்டு இது 94 சதவீதமாகவும் அதிகரித்தது.

ஆகவே சீனாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது வருமானத்தில் 95 சதவீதத்தை வழங்க வேண்டியுள்ளது. இதன்விளைவாக சிறிலங்கா அண்மையில் அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் டொலர் நிதியைப் பெறவேண்டியேற்பட்டது.

எதுஎவ்வாறெனினும், சீனாவின் சென்சென் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் மாற்றியமைக்க முடியும் என பிரதமர் விக்கிரமசிங்க நம்புகிறார். ‘நாங்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை எமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இதன் செலவை ஈடுசெய்ய முடியாது. இதற்காகப் பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஆகவே சீன அரசாங்கத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குறித்த சதவீதத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதெனத் தீர்மானித்தோம். இத்துறைமுகத்தில் சுத்திகரிப்பு நிலையம், LNG மற்றும் சீமெந்து ஆலை, கப்பல் தரிப்பு நிலையம் போன்றவற்றை அமைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சென்செனில் மேற்கொண்டது போன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இருப்பிடத்தை மாற்றியமைப்பதற்காக பின்தளத்தில் 50 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பை வழங்குமாறும் சீன வர்த்தக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது’ என பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆனால் சிறிலங்காவின் மிகவும் பின்தங்கிய இடங்களில் ஒன்றான தென்முனையில் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டையானது சீனாவின் சென்சென் கேந்திர முக்கியத்துவத்துடன் நிச்சயமாக ஒப்பீடு செய்ய முடியுமா?

‘ஏன் முடியாது? நான் 1979ல் சென்செனிற்குச் சென்றபோது அது வெறும் வயல்நிலமாகவே காணப்பட்டது. நான் கன்ரோனிலிருந்து கொங்கொங் வரை தொடருந்தில் பயணித்தேன். நான் மீண்டும் 1987ல் அவ்விடத்திற்குப் பயணம் செய்தேன். அப்போது சென்சென் ஒரு சிறிய மீன்பிடிக் கிராமமாக மாறியிருந்ததை நான் பார்த்தேன். 1979ல் சென்சென் எந்த நிலையிலிருந்ததோ அந்த நிலையை விட இன்று அம்பாந்தோட்டை அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் இங்கு கூறவேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

வழிமூலம்       – South China Morning Post
ஆங்கிலத்தில்  – DEBASISH ROY CHOWDHURY
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *