கவிஞர் இன்குலாப் சென்னையில் காலமானார்
தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார்.
உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, கவிஞர் இன்குலாப் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என கவிஞர் இன்குலாப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. தமிழ்நாட்டின் கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார்.
தீவிர தமிழ்ப் பற்றுக் கொண்டவரான கவிஞர் இன்குலாப், 1965 இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டதால், தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப், ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து எழுதிய கவிதைகள், 1990களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு தொகுப்பாக விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டது.
இந்திய இராணுவத்தினர் ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த, “ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையில் ஓரங்கள் பற்றி எரிகின்றன” என்ற பிரபலமான பாடலை கவிஞர் இன்குலாப் எழுதியிருந்தார்.
கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. பின்னர், தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் எழுதினார்.
சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.