தமிழர் தாயகத்தில் பரவலாக மாவீரர் நாள் நிகழ்வுகள் – காலையிலேயே தொடங்கியது
தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில், நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் உள்ளிட்டோர் மாவீரர் நினைவாக தீபம் ஏற்றினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியின் மீது சிறிலங்கா படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வாயிலுக்கு முன்பாக, இன்று காலை தீபம் ஏற்றப்பட்டு அச்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டார்.
மன்னாரில் கரிசல் கப்பலேந்திய மாதா ஆலயத்தில், அருட்தந்தை செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மன்னாரில் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று காலை துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது.
அதேவேளை, இன்று மாலை 6.07 மணியளவில், பெரியபண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டிவெளி துயிலுமில்லங்களில் மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முலலைத்தீவு மாவட்டத்தில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் இன்று மாலை தீபம் ஏற்றப்படவுள்ளது.
கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களும், வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லமும், துப்புரவுசெய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, புதைந்து போயிருந்த கல்லறைகள் மீட்கப்பட்டு, தீபம் ஏற்றுவதற்கு தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராக வருகின்றனர்.