மேலும்

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை

killing-studentsபுலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது. – லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலம் மிகவும் முக்கியமானது. உள்நாட்டு வளர்ச்சியை அடித்தளமாக கொண்டது.  அத்துடன் இந்தியாவின் பொருளாதார விரிவாக்கத்தினை குறிக்கோளாக கொண்டு செலுத்தப்படுவது.

இதனால்  உலகின் அரசியல் பொருளாதார பார்வையாளர்களின் கவனத்தை அது ஈர்ப்பதுடன், மோடி அவர்களின் பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகியன மீதான ஆய்வுகள்  தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

2015 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் இல் இருக்க கூடிய ஒரு சிந்தனை மையமான The Instut Francais des relations internationals (Ifri) என்ற அமைப்பு பிரதமர் மோடி அவர்களின் நூறு நாள் பதவிக்கால வெளியுறவுக் கொள்கை குறித்த Economics in Narendra Modi’s Foreign Policy என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையில் முக்கியமான ஒருவிடயம் மோடி அவர்களின் பொருளாதார வெளியுறவுக் கொள்கையில் புலம்பெயர் இந்தியர்களை அவர் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொள்ள வைத்து கொண்டு வழிநடத்திச் செல்வது குறித்த ஆய்வு ஆகும்.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டே அவர் புலம்பெயர் குஜராத் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். குஜராத்தின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கு அந்த மாநிலத்தின் புலம்பெயர் சமுதாயத்தின் பங்களிப்பின காரணமாகவே நடைமுறைச் சாத்தியமானது. அதன்  ஊடாகவே சர்வதேச தரத்திலான கருத்தரங்குகள் உதாரணமாக Vibrant Gujarat போன்ற மாநாடுகளை நடத்தி இருந்தார்.narendra-modi

மோடி அவர்களின் பிஜேபி கட்சி கடல்கடந்த இந்தியர்களுடன்மிக இறுக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது. இதனால் பொருளாதார முதலீடுகளும் இத்தகைய தொடர்புகளூடாக இணையப் பெற்றுள்ளது.

மேலும் புலம் பெயர் சமுதாயம் இந்தியாவின் மீதான உலகின் பார்வையை மேம்படுத்தல், புலம்பெயர்ந்தோர் குடிகொண்டுள்ள நாடுகளில் மூலோபாய நலன்களை பிழிந்து எடுத்தல், உள்ளுர் அரசியலிலும் வெளியுறவு கொள்கையிலும் கூட அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா,  ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் வாழும் இந்திய பூர்வீக குடிமக்கள்அவர்களின் அடுத்த தலைமுறையினர் ஆகியோர் செயல்திறன் கொண்ட பங்காளிகளாகவும் வலுமிக்க தாக்கத்தை வளைவிக்க கூடிய பங்களிப்புகளை செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்.

இந்தியா பொதுத்தேவைக்காக,  அமெரிக்க – இந்திய அணுத்தொழில்நுட்ப கூட்டுறவு  ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிநாட்டு இந்தியர்களின் கருத்தாதரவுக்களம் பெரும் பங்காற்றி உள்ளது. இதற்காக அமெரிக்க சட்டவாக்கவாளர்களை இந்தியர்கள் அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தனர்.

மோடி  அவர்களினதும் பிஜேபி கட்சியினதும் பொருளாதார திட்டங்களில் புலம பெயர் இந்தியர்கள் மிகப்பெரிய பொருளாதார மூலாதாரமாகும். மேலும் தொழில்நுட்ப அறிவும் திறனும் அனுபவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றி அமையாதது. அத்துடன் make in India எனும் திட்டத்திற்கும் புனித கங்கை நதியை சுத்தம் செய்யும் பாரிய திட்டத்திற்கும் கூட வெளிநாட்டு இந்தியர்களின் உதவி மிக தேவையானதாகும்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக புலம்பெயர் நாடுகளில் இருந்து உல்லாசமாகவும் உறவினரிடமும் வந்து செல்லும் இந்தியர்கள் செலவிடும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் விளைவிக்கவல்லது. என்பது பிரான்சிய சிந்தனை மையமான Ifri இன் பார்வையாக உள்ளது.

***  ***  ***

இதே வகையிலான திட்டங்களை எமது சமுதாயத்தில் அறிமுகப்படுத்துவது போலான ஒரு சிறிய நடவடிக்கையே  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  அவர்கள்  லண்டனில் கிங்ஸ்ரன் நகரசபையுடன் செய்து கொண்டிருந்த உடன் படிக்கையாகும்.

இலங்கைத்தீவில் தென்பகுதிக்கு போதியளவு அரச அங்கீகாரத்துடனான அபிவிருத்தி திட்டங்களும் அதனால் தென்பகுதி மக்கள் பெற்றுக் கொள்ளகூடிய  பொருளாதார நலன்களும் போல, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிடைப்பதில்லை என்ற மனப்பாங்கு தமது மாகாணத்தின் அபிவிருத்தியில் கரிசனை கொண்டுள்ள பலரிடமும் உள்ளது.

அதேபோல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இந்திய மக்களைப் போல தாமும் தமது சொந்த மண்ணின் பொருளாதார அபிவிருத்திகளில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆசையும் புலம்பெயர்ந்து வாழும் வடக்கு, கிழக்கு மக்களிடமும் உள்ளது. இதற்கு முனைப்பாக சிறிய அளவிலான திட்டங்கள், ஏற்கனவே சிறிய சிறிய அமைப்புகளாகவும் தனிப்பட்ட முறையிலும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

இந்த சூழ்நிலைகளின் மத்தியிலே சில புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சியில் வடமாகாணத்திற்கும் கிங்ஸ்ரனுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டு  இரட்டை நகர உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது . கல்வி, சுகாதாரம், நிர்வாக அறிவு போன்றவற்றுடன் தொடர்புடைய  புலம்பெயர்  தமிழ் சமூகத்தை சேர்ந்த பல் துறைசார்ந்தோரும்  பங்கு பற்றி இருந்தனர். இவர்கள் அனைவரதும் நோக்கம் வடமாகாணத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வதே ஆகும்.

kinston-upon-thames-jaffna-accord

பல்வேறு கட்சிகள் முன்பு ஆட்சியில் இருந்த போதிலும் Royal Borough of Kinston upon Thames  பழமைவாத கட்சியின் ஆட்சியில் தற்போழுது உள்ளது. Surrey எனப்படும் County  இல் கிங்ஸ்ரன் மிகப்பிரதானமான நகரமாகும். லண்டனை சூழ உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் சற்று வசதி உடையவர்கள் Surrey நோக்கி நகர்வதற்கு முயற்சிப்பது வழமை.

ஏனெனில் கல்வியை தமது மூலாதாரமாக கொண்டு வாழும் ஈழத்தமிழர்கள், சிறந்த பாடசாலைகளுக்காகவும்,  வசதியான வீடுகளுக்காகவும்,  மாத்திரமன்றி, அப்பகுதியில் வாழ்வதில் இருக்கும் ஒரு சுய கௌரவத்தையும் கவனத்தில் கொள்கின்றனர்.  பொதுவாக மத்தியஉயர் வகுப்பை சேர்ந்த சமுதாயமாக இந்தப் பிரதேசம் கணிப்பிடப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும்.

வடக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Kinston Municipal Chamber  இல் கூடி இருந்த மக்கள் மத்தியிலே உரையாற்றினார். அவரது ஆரம்ப உரையிலேயே,கடந்த சில காலமாக தடைப்பட்டு கிடந்த இந்த முயற்சிக்கு சட்ட வரைமுறைகளை கடந்து வழிஏற்படுத்திக் கொடுத்ததற்கு சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சட்ட வரைமுறைகளைக் கடந்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த உள்ளுராட்சி நிறுவனங்கள்  சர்வதேச பரிமாணத்தில் ஒப்பந்தங்களை  செய்து கொள்வதில் இருக்கும் சட்டச்சிக்கல்கள், மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் 13ஆவது திருத்தசட்டத்தின் தடைகளுக்கும் அப்பால் இந்த நிகழ்ச்சி இடம் பெறுவது, யாழ். குடாநாட்டில் 150,000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பது, மாணவர்கள் மத்தியில் கல்வி வசதிகள் அற்ற நிலை, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம் குடியேறி இருப்பது, வடக்கு-கிழக்கில்  பொருளாதார முன்னேற்றதுக்கான தேவைகள், அதில் புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யக்கூடிய பங்களிப்பு குறித்தும் அவர்  பேசி இருந்தார்.

இத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  வடமாகாணத்தை , சர்வதேச இரட்டை நகர உடன்படிக்கைக்கு பலமாத தாமதத்தின் பின்னர் வழிசமைத்து கொடுத்தமை மிகவும் கவனத்திற்கு உரியதாகப் படுகிறது.

ஏனெனில், இறையாண்மை என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஒரு அரசு அதிஉச்ச அதிகாரத்தை நடைமுறையில் பிரயோகம் செய்யக்கூடிய தன்மையாகும். வெளிப்பிரதேசங்களில் இருந்தோ அல்லது அந்த நிலப்பரப்பிற்குள்ளேயே சிறிது சிறிதாகவோ திடீரெனவோ எப்பொழுதும் இறையாண்மைக்கான அச்சுறுத்தல் இருந்த வண்ணமே இருக்கும்.

அந்த இறையாண்மையின் ஒரு பகுதியை, குறிப்பிட்ட பகுதி தலைமைக்கு விட்டுக் கொடுப்பது என்பது எந்த ஒரு அரசிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அதுவும் பேரினவாத இறையாண்மையை சொல்லத் தேவையில்லை!

இறையாண்மையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் விளைவு குறித்து முதலமைச்சர் அவர்களே Rainerslane இல் இடம் பெற்ற கூட்டத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க இரு நகர சர்வதேச ஒப்பந்த மையிடலுக்கு ஒப்புக்கொள்ள எடுத்துக் கொண்ட காலம் மிகவும் கவனத்திற்கு உரியது.

இது  சட்டச்சிக்கல்களை தீர்ப்பதற்கு அல்ல, வடமாகாண சபைக்கு ஒரு பாடம் புகட்ட தீட்டப்பட்ட திட்டத்திற்கான காலமேயாகும் என்று ஏன் சந்தேகிக்க வேண்டியுள்ளது என்று இங்கு பார்க்கலாம்.

jaffna-students-protest-10

ஏற்கனவே தமிழ்ப் பிரதேசங்களில் களவுகள், கொலைகள், போதைப்பொருள் விவகாரங்கள் என்பனவற்றடன் சம்பந்தப்பட்ட  பல்வேறு குழுக்கள் இருந்தன. (இவ்வாறு இயங்குவது குறித்தும் அது இராணுவ உதவியுடனே இடம்பெறுவது குறித்த சந்தேகத்தையும், முதலமைச்சர் வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் கூறி விட்டார்) இந்த குழுக்களை ஒழிக்கவென காரணம் காட்டப்பட்டு இதற்கு எதிரான இராணுவ நடவடிக்கை, காவல்துறை கெடுபிடிகள் என்பன, சரியாக முதலமைச்சர் அவர்கள் லண்டன் பயணமாகும் போதே ஆரம்பிக்கப்பட்டது. ஆங்காங்கே காவல்துறை  மறியல்கள் மீண்டும் போடப்பட்டு வழிமறிப்பு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தச் சூழலில் தான், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஒக்ரோபர் 20 ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.

இந்தப் படுகொலை முதலமைச்சர் அவர்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு பொருளாதார முதலீட்டில் பங்குகொள்ள அறைகூவல் விடுத்த பின்னர்- பெரும் எண்ணிக்கையான மக்களை அவர் சந்தித்து உத்தரவாதங்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் காவல்துறை நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டது. மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.  காவல்துறை அதிகாரிகள் இருவர் வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளாகின்றனர். பொருளாதார அபிவிருத்தியை எதிர் நோக்கி நிற்கும் மக்கள் மத்தியில் அது சாத்தியப்படாது என்று கூறுவதுபோல், யாழ்ப்பாணம் மீண்டும் கெடுபிடிகளுக்கு உள்ளானது.

இங்கே அனைத்தும் திட்டமிட்டு நடந்தது போலான ஒரு தோற்றப்பாடு உருவாக ஏதுவாய் இருந்த காரணிகளை இப்பொழுது பார்க்கலாம்.

முதலாவதாக,  இரு மாணவர்கள் படுகொலையின் பின்னான சூழ்ச்சிகள் என்னவாக இருக்கக் கூடும் என்று தாம் ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தமையாகும்.

இவர் நாசூக்காக தெரிவித்தாரோ அல்லது உண்மையிலேயே ஆராய்வதற்கு குறிப்பிட்டாரோ என்பது இன்னுமோர் விடயம். ஆனால் முதலமைச்சரின் உள்ளக எதிர் இருக்கைக்காரர் என்ற வகையில் ஏதோ பின்புற அறிவு அவரிடம் இருக்கலாம் என்று பார்க்கும் போது,  இது ஏன் திட்டமிட்ட படுகொலையாக இருக்கக் கூடாது என்று ஆராயத் தோன்றியது. அல்லது தோன்ற வைக்கிறது.

அடுத்து சிறீலங்கா அதிபர் யாழ்ப்பாணம் வந்து பேசிய பேச்சில் தென்பகுதியில் என்றால் விடயம் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும் தமிழ் மக்கள் நீங்கள் மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற பொருள்பட கூறி இருந்தார்.

இதில் இந்த கொலைகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

அதாவது அவர் சொல்லாத விடயம் என்னவென்றால், தென்பகுதியில் என்றால் இன்று காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் கச்சேரியையும் தீயிட்டு கொளுத்தியிருப்பார்கள் என்பது போல் உள்ளது.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் செய்வதையோ அல்லது முதலீடுகள் செய்வதையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது; தமிழர் சமுதாயம் ஒரு வன்முறை வடிவம் பெற்ற சமுதாயம் என்பதை நிரூபிப்பதற்கும் இந்த எதிபார்ப்பு தேவையானது,

மேலும் லண்டனிலே முதலமைச்சர் கூறிய 150,000 இராணுவத்தை தொடர்ந்தும் வடபகுதியில் வைத்திருப்பதற்கு போதிய காரணம் ஏற்பட்டிருக்கக் கூடிய வன்முறைகளை விட வேறு எதுவும் இருக்க முடியாது. அத்துடன் சர்வதேச அளவில் முதலமைச்சரது கூற்றை நடைமுறையில் மழுங்கடித்ததாக ஆக்கி விட முடியும்.

ஆகவே சிறிலங்கா அதிபரின்  பேச்சில் இருந்து பிறந்த சிந்தனையும், இது ஒரு திட்டமிட்டு செய்த படு கொலைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்த அதேவேளை, பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தை துண்டும் வகையில் தமிழர்கள் இராணுவத்தை தாக்குவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டு அவை பத்திரிகைகளிலும் செய்தியாக பரவவிடப்பட்டது.

மேலும் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று, பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளால் பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கோசம் எழுப்பப்பட்டது.

புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரப் பலம், அவர்களின் முன்னேற்றம், தொழில்சார் நுட்ப அறிவு, கல்வித்துறையில் அவர்கள் கொண்ட நாட்டம், புலம்பெயர் தமிழரும் உள்நாட்டுத் தமிழரும் இணையும் போது  அதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களது சந்ததியினர் சிறீலங்காவில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்பன குறித்த கற்கைகள் தேசியப்பாதுகாப்பு என்ற பெயரில் சிறீலங்கா அரச ஊட்டத்தில் கற்கப்பட்டு வருகிறது. இத்தகைய செய்தி அறிக்கைகளின் பிரசன்னமும், இந்த இரட்டைப்படுகொலையை அரசின் உத்தியாகவே பார்க்க தூண்டுகிறது.

அடுத்தபகுதி மிக விரைவில்….

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *