மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மீண்டும் தெரிவு – ரஷ்யா தோல்வி

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான 14 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்காக நேற்று ஐ.நா பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் சுழற்சி முறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை காலாவதியாகும்.

இந்த வகையில், இந்த ஆண்டு டிசெம்பருடன் பதவிக்காலம் முடியவுள்ள  14 நாடுகளின் இடங்களுக்குப் பதிலாக புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று ஐ.நா பொதுச்சபையில் இடம்பெற்றது.

இதில், பிரேசில், சீனா, குரோசியா, கியூபா, எகிப்து, ஹங்கேரி, ஜப்பான், ருவான்டா, ஈராக், சவூதி அரேபியா, துனீசியா, தென்னாபிரிக்கா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வெற்றி பெற்று 2017 ஜனவரி தொடக்கம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உறுப்புரிமையைப் பெற்றுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மீண்டும் தெரிவாகியுள்ளன.

எனினும், ரஷ்யா மீண்டும் போட்டியிட்ட போதிலும், தோல்வியைத் தழுவியது.

மனியத உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷ்யா, சீனா, கியூபா, ஈராக், எகிப்து, ருவான்டா, மலேசிய ஆகிய நாடுகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவு செய்யக் கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் பரப்புரை செய்து வந்தன.

கிழக்கு ஐரோப்பிய பிரிவில், போட்டியிட்ட ரஷ்யா, 112 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது. ஹங்கேரி 144 வாக்குகளையும், குரோசியா 114 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றன.

2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை ரஷ்யா அடுத்த ஆண்டு இழக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *