மேலும்

சிறிலங்கா படைகளைத் தண்டிக்கவே காணாமற்போனோர் பணியகம் – மகிந்த குற்றச்சாட்டு

Mahinda-Rajapaksaசிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான பணியகம், சிறிலங்காப் படையினரைத் தண்டிப்பதற்கான ஒன்று எனக் குற்றம்சாட்டியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, இதனை உருவாக்குவதற்குத் துணைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள, காணாமற்போனோருக்கான பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே கொண்டு வரப்படவுள்ளது.

காணாமற்போனோர் பணியக சட்டமூலம் ஆயுதப்படைகளைத் தண்டிக்கும் பல்வேறு விதப்புரைகளைக் கொண்டுள்ளது.

காணாமற்போனோர் பணியகம் சிறிலங்காவின் அரச சட்டத்தை நடைமுறைப்படுத்தும்,  நீதிமுறைகளின் கீழ் செயற்படாது. நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்படும் சுதந்திரமான அமைப்பு ஒன்றின் கீழேயே இயங்கும்.

இந்த பணியகத்தின் அதிகாரிகளுக்கு, சாட்சிகளை விசாரிக்கும், அழைப்பாணை விடுக்கும், விசாரணைகளில் பங்கேற்கும் அதிகாரம் உள்ளது,  இவர்கள், நீதிமன்ற உத்தரவின்றி – எந்த நேரத்திலும், இரவிலும் கூட, எந்த காவல்நிலையம், சிறைச்சாலை, இராணுவ முகாம்களுக்குள் நுழையவும், தமது விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை கைப்பற்றவும் முடியும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட நேரிடும்.

காணாமற்போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களும், உண்மை கண்டறியும், மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், அவர்கள் மேற்குலகினால் நிதியளிக்கப்படும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவோ, அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றங்களில் மேற்குலக ஆதரவுடன் இணைந்து செயற்படுபவர்களாகவோ இருப்பார்கள்.

காணாமற்போனோர் பணியகம், நேரடியான வெளிநாட்டு மூலங்களில் இருந்தே நிதியைப் பெறவுள்ளது.

இந்த அமைப்பினால் வெளிநாட்டு நபர்கள் மற்றும் அமைப்புகளுடன், உடன்பாடு செய்து கொள்ள முடியும்.

காணாமற்போனோர் குறித்த உறவினர்களின் முறைப்பாடுகளை மாத்திரமன்றி, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள எவரேனும் முறைப்பாடுகளை செய்யலாம்.

ஆயுதப்படைகள், புலனாய்வுச் சேவைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் இதற்கு உதவ வேண்டும். அரசாங்க இரகசிய சட்டம் இதனைக் கட்டுப்படுத்தாது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த தகவலையும் பெற முடியாது. எனவே உயர் நீதிமன்றத்தினால் கூட காணாமற்போனோர் பணியகத்தின் அதிகாரிகளையோ ஆவணங்களையோ முற்படுத்துமாறு கோர முடியாது.

இந்தப் பணியகம், போர்க்குற்ற விசாரணையின் ஒரு அங்கமாகத் தான் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததற்குப் பொறுப்புக் கூற வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *