மேலும்

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் – துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை

Prof.-Mohan-de-Silvaயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலைப் போன்று, ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் ஏற்படலாம் என்பதால், துணைவேந்தர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“கலைப்பீட மாணவர்கள் தான் மோதலை ஆரம்பித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகம் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மூடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கலகத் தடுப்பு காவல்துறையினர் அழைக்கப்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த யாழ். படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உதவினார்.

மாணவர் விடுதிகள் மற்றும் தனியார் தங்குமிடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டு நெற்றியில் காயமடைந்த மாணவர் ஒருவர் மாத்திரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய பெற்றோருடன் தொடர்பு கொண்டு பேசிய போது, மாணவர் நன்றாக இருப்பதாகவும், சத்திரசிகிச்சை தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

நான்கு மாணவிகள் ஓடும் போது காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வெளியேறியுள்ளனர்.

இன்றும் நாளையும் அவதானித்து விட்டு, யாழ். பல்கலைக்கழகம் பெரும்பாலும் புதன்கிழமை திறக்கப்படலாம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் பிரச்சினை இல்லை. ஆனால், இதுபோன்ற தூண்டுதல் சம்பவங்கள் சில உள்ளன.

இதனால் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற நிலைமை ஏற்படுமோ என்ற கவலைகள் உள்ளன. இதனால், ருகுணு, பேராதனை, களனி, சிறி ஜெயவர்த்தனபுர, கொழும்பு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் தொடர்பு கொண்டு அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளேன்.

வரும் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழுவின் ஏழு ஆணையாளர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ளோம்.

இத்தகைய சம்பவங்களின் தாக்கம் தொடர்பாக பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்த, புலமையாளர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் பிரபலமாக உள்ள தொலைக்காட்சியில், ஒளிபரப்ப யாழ். படைகளின் கட்டளைத் தளபதி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *