மேலும்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயற்படவில்லை – கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

sampanthanதமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படத் தவறியிருக்கிறது என்று, மன்னாரில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ என்ற தலைப்பில், மன்னார் மாவட்ட பொதுஅமைப்புகளின் ஒன்றியம் நேற்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இந்தக் கருத்தரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன், திருகோணமலை மற்றும் மன்னார் மறை மாவட்டங்களின் ஆயர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்தக் கருத்தரங்கில், உரையாற்றியவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

Mannar-conference

அனைத்துலக அரங்கில் சரியான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறிவிட்டார்கள்,  கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை, கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண சபை ஆளுமையுடன் செயற்படவில்லை,  வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்திலும்  கூட்டமைப்பினால் ஒற்றுமையாக- சரியானதொரு தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுக்களை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் மறுத்துக் கருத்துக்களை வெளியிட்டனர்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்த முக்கிய நடவடிக்கைகள் குறித்து இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.

“ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற  நம்பிக்கை உள்ளது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நாட்டின் தென்பகுதியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அவர்களுடைய எண்ணம் ஈடேறத்தக்க வகையில், தமிழ்த் தரப்பினர் குழப்பக் கூடாது. தமிழ் மக்கள் நிதானமாகவும் பொறுப்போடும் செயற்பட வேண்டும்” என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

(செய்தி உள்ளடக்கமும் படமும் –  பிபிசி தமிழோசை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *