மேலும்

நீதிமன்றத்தை முட்டாளாக்க முயன்று நீதிபதியிடம் வாங்கிக்கட்டினார் 58 ஆவது டிவிசன் தளபதி

Major General K.C Gunawardanaபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை முல்லைத்தீவு நீதிவான் கடிந்து கொண்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமற்போன எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளில் சிலரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த விசாரணைகளின் போது, 58ஆவது டிவிசன் படைப்பிரிவிடம், வட்டுவாகலில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியல், தமது தலைமையகத்தில் இருப்பதாக, அதன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன ஒப்புக் கொண்டிருந்தார்.

இதையடுத்து. அடுத்த தவணையின் போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான பட்டியலுடன் வருமாறு முல்லைத்தீவு நீதிவான், மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தனவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் பின்னர் இரண்டு தவணைகளின் போது, மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகவோ, சரணடைந்த புலிகளின் பட்டியலைச் சமர்ப்பிக்கவோ இல்லை.

இதனால், கோபமடைந்த நீதிவான், இன்றைய விசாரணைகளில் பட்டியலுடன் முன்னிலையாகத் தவறினால், பிடியாணை பிறப்பிக்க நேரிடும் என்று கடைசித் தவணையின் போது எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 58 ஆவது டிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன பட்டியல் ஒன்றை சமர்ப்பித்தார்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் விடுதலைப் புலிகளின் பட்டியலையே அவர் சமர்ப்பித்திருந்தார். அதனைப் பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் சம்சுதீன், கடும் கோபமடைந்தார்.

இந்த விபரங்களை புனர்வாழ்வு அமைச்சின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். வட்டுவாகலில் சரணடைந்தவர்களின் விபரங்களைத் தான் நீதிமன்றம் கோரியது. அதனை அடுத்த தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தனவிடம் நீதிவான் கண்டிப்புடன் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு வரும் செப்ரெம்பர் 29ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு கருத்து “நீதிமன்றத்தை முட்டாளாக்க முயன்று நீதிபதியிடம் வாங்கிக்கட்டினார் 58 ஆவது டிவிசன் தளபதி”

  1. இளிச்சவாயர்கள் சங்க தலைவன் says:

    DRAMA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *