மேலும்

பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் – அமெரிக்கா

nisha-press-colombo (1)பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டியது அவசியம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினொவ்ஸ்கி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினருக்கும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,

“இன்று காலை நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோரை, அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினோம்.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் இடம்பெறும் சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.

குறிப்பாக அரசியலமைப்புத் திருத்த விவகாரம், சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் விவகாம் குறித்து நீண்ட பேச்சுக்களை நடத்தினோம்.

இந்த செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கமும், தரப்பினரும் முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக அமெரிக்காவின் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

பொறுப்புக்கூறலில் அனைத்துலகப் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கள் வேறுபட்ட கருத்துக்கள் வெளியாவதை தாம் அவதானித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி, ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் போது பேச முடியும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசி்யம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்புக் குறித்தும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்களுடன் பேசியுள்ளோம். ஜெனிவா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், மிகவும் தாமதமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளோம்.

இது தமக்கும் தெரியும் என்றும், இதுபற்றி ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் பேசியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறிலங்கா அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதனை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக அரசாங்கத்துக்கு உறுதியளித்திருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்” என்றும் தெரிவித்தார்.

ஒரு கருத்து “பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் – அமெரிக்கா”

  1. value says:

    பகல் கனவு நல்லாயிருக்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *