மேலும்

நிலங்களை மீட்பதற்கான கேப்பாப்பிலவு மக்களின் உறுதியான போராட்டம்

keppapilavu-demo‘நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது, எனது அம்மாவினதும் எனது அப்பாவினதும் அன்பைப் பெறுவது போன்று உணர்கிறேன்’ என நீண்ட காலமாக தனது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கும் கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

மே 24 அன்று கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்திற்குத் திரும்ப வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். தமது நிலங்களை சிறிலங்கா அரசாங்கம் மிக விரைவாகக் கையளிக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் கிராமத்தவர்கள் வாழ்கின்றனர். மே மாதத்தில் கிராமத்தவர்கள் தமது வீடுகளைப் பார்க்க முடிந்தது. ஏனெனில் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா இராணுவத்தினரால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கேப்பாப்பிலவுக் கிராம வீதிகள் திறந்து விடப்பட்டன.

‘ஒவ்வொரு ஆண்டும் எமது நிலங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஏனைய கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காணிகளின் எல்லைகள் வேறுபட்ட அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் எமது காணிகளில் நாட்டிய பலா மற்றும் தென்னை மரங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன’ என கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரலீலா தெரிவித்தார். எனினும் கிராமத்தவர்கள் அனைவரும் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வார்கள் என இப்பெண்மணி நம்புகிறார்.

‘அவர்கள் எமது நிலங்களை விடுவிக்க வேண்டும். நாங்கள் மீண்டும் எமது சொந்த நிலங்களுக்குச் செல்வோம். அவர்கள் எமது வீடுகளை அழித்தாலும் கூட, அவர்கள் எமது நிலங்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்’ என்கிறார் சந்திரலீலா.

keppapilavu-demo

வரலாறு

கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவானது  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இப்பிரதேச செயலகத்தின் கீழ் சூரிபுரம், சீனியமோட்டை, கேப்பாப்பிலவு மற்றும் பழக்குடியிருப்பு ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் மற்றும் மீனவர்களை அதிகமாகக் கொண்ட இப்பிரதேச வாழ் மக்கள் ஆறு பத்தாண்டுகளுக்கு மேல் இப்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர். அத்துடன் காணியற்ற மக்களுக்கு புலிகள் அமைப்பால் இப்பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு குடியேறியவர்களும் தற்போது இங்குள்ளதாக இப்பிரதேச வாழ் மக்கள் தெரிவித்தனர். பயிர் செய்வதற்கு உகந்த செம்மண், நல்ல தண்ணீர்க் கிணறுகள் மற்றும் கடல் வளங்களை கேப்பாப்பிலவு தன்னகத்தே கொண்டுள்ளது. 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சட்டத்திற்கு மாறாக மெனிக்பாம் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களில் கேப்பாப்பிலவுக் கிராமத்தவர்களும் உள்ளடங்குவர்.

2012 செப்ரெம்பரில் கேப்பாப்பிலவைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு கால் ஏக்கர் காணி வீதம் ஒதுக்கப்பட்டது. இதனால் இவர்கள் தமது சொந்த இடத்திலிருந்து மீண்டும் சூரிபுரம் என்கின்ற கிராமத்திற்கு மீளவும் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுவே தற்போது ‘கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமம்’ என அழைக்கப்படுகிறது. தமக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும், அதிகாரிகளிடமிருந்து தங்குமிட வசதிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்த மக்கள் விசனம் கொள்கின்றனர். இவர்கள் மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டுவந்த வளத்தைக் கொண்டே தமக்கான சிறிய கூடாரத்தை அமைத்தனர்.

தற்காலிக அனுமதிகள்

150 குடும்பங்களும் புதிய காணிகளை ஏற்றுக்கொள்வதாக விண்ணப்பம் ஒன்றில் கையொப்பமிடுமாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரால் கோரப்பட்டது. இக்குடும்பங்களில் இரண்டு குடும்பத்தினர் இவ்விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த போதிலும், இவர்கள் புதிய நிலத்திலேயே தொடர்ந்தும் வாழவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. பின்னர் இவர்களுக்கு தற்காலிக அனுமதிகள் வழங்கப்பட்டன. தமது உறவினர்களுடன் தங்கியிருந்த கேப்பாப்பிலவைச் சேர்ந்த ஏனைய 146 குடும்பத்தினரும் ஜனவரி 2013ல் சூரிபுரத்தில் குடியேறினர். இவர்கள் இங்கு குடியேறுவது தொடர்பாக எவ்வித நிலப் பத்திரத்திலும் கையொப்பமிடுமாறு கேட்கப்படவில்லை. சூரிபுரத்தைச் சேர்ந்த 59 குடும்பங்கள், பிளவுகுடியிருப்பைச் சேர்ந்த 55 குடும்பங்கள், கேப்பாப்பிலவைச் சேர்ந்த 159 குடும்பங்கள் தற்போது தமது சொந்த இடங்களிலிருந்து மீளவும் இடம்பெயர்ந்து கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களது சொந்த நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாமையே இதற்கான காரணமாகும். 2013 மார்ச்சில் 16 குடும்பங்கள் தமது சொந்த இடமான சீனியாமோட்டையில் குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் 520 ஏக்கர் நிலப்பரப்பு சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த நிலங்களிலுள்ள வீடுகள் இராணுவத்தினரதும், அவர்களது குடும்பங்களினதும் வாழ்விடமாக மாறியுள்ளது. இதற்கப்பால், பாடசாலைகள், தேவாலயங்கள் போன்றனவும் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இங்கு இராணுவக் குடும்பங்களைத் தங்கவைப்பதற்காக புதிய வீடுகள் கூட கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டுத் திட்டம்

மார்ச் 2014ல், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் 287 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன. 2013ல் இந்த வீட்டுத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ‘இது தற்காலிக வீட்டுத் திட்டம் என்பதால் இங்கு எவ்வித மரங்களையும் நாட்ட வேண்டாம்’ என மக்களிடம் தெரிவித்திருந்தார். ‘அரசியல் நிலைமை மாறினால், சொந்த நிலங்களுக்கு நீங்கள் செல்லக் கூடிய நிலை உருவாகும்’ என அமைச்சர் முரளிதரன் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரதேசத்தில் போதியளவு நீர் வசதியில்லாததால் கிட்டத்தட்ட 25-30 வரையான குடும்பங்கள் இராணுவத்தினரால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தங்கியிருக்கவில்லை. ‘நாங்கள் முன்னர் வாழ்ந்த இடத்தில் பெரிய கிணறுகள் இருந்தன. இதனால் குளிர்மையான, சுத்தமான நீரை நாங்கள் குடித்தோம். எமது தாகம் தீரும் வரை நீரைக் குடிக்கக் கூடிய வளம் எம்மிடம் இருந்தது. ஆனால் தற்போது நீண்ட தூரம் நடந்து சென்றே குளிக்க வேண்டியுள்ளது’ என இக்கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்கள் ஏக்கத்துடன் கூறினர்.

விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் தமது புதிய குடியேற்றக் கிராமத்திலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெல்வயல்களுக்குச் செல்வதென்பது இலகுவான காரியமல்ல. இந்த வயல்நிலங்கள் இந்த மக்களின் சொந்தக் கிராமங்களிலிருந்த வீடுகளுக்கு அருகில் உள்ளன. ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இந்த மக்கள் பல மைல்கள் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வீட்டுத் தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கை போன்றன இந்த மக்களின் பிரதான செயற்பாடுகளாக இருந்த போதிலும், தமது சொந்த இடத்திற்குச் செல்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தாம் தற்போது குடியேற்றப்பட்டுள்ள வீடுகளைக் கண்காணிப்பதற்காக பெண்களும் சிறுவர்களும் தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இராணுவ ஆக்கிரமிப்பு

கிட்டத்தட்ட கடற்கரை வழியாக மூன்றரைக் கிலோமீற்றர் நீண்ட பாதையான இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதன் ஊடாகப் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக மீனவர் சங்கத்தின் தலைவர் காளியப்பன் மகேஸ்வரன் தெரிவித்தார். மீனவர்கள் தமது படகுகளைக் கரையில் நிறுத்தி வைக்க முடியாத நிலை காணப்படுகிறது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடற் கரையிலிருந்து கடலில் 40 மீற்றர் தூரம் வரை மீன்பிடியில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என மீனவ சங்கத் தலைவர் சுட்டிக்காட்டினார். இடப்பெயர்வின் முன்னர் தமது வீடுகளிலிருந்து கடற்கரையானது 150 மீற்றர் கிட்டிய தூரத்தில் இருந்தது. தற்போது கடலுக்குச் செல்வதற்கு 700 மீற்றர் தூரத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதாக காளியப்பன் மகேஸ்வரன் தெரிவித்தார்.

இராணுவத் தடைகள் காரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு தடவை மட்டுமே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க முடியும். இதனால் இவர்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இடப்பெயர்விற்கு முன்னர் மீன்பிடிக்குச் செல்வதற்கான தடை விதிக்கப்பட்ட நேரங்களில் தனது நிலத்தில் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதால் வருமானத்தைப் பெற முடிந்ததாக மகேஸ்வரன் தெரிவித்தார். எனினும், தற்போது இப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான சாத்தியம் இல்லை எனவும், மாதிரிக் கிராமத்தில் பொதுக் கிணறுகளிலேயே நீரைப் பெற்றுக் கொள்ள முடிவதாகவும் இவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கை முறைமை மாற்றமுற்றமை போன்றன கிராமத்து இளைஞர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்வதாக கிராமத்தவர்கள் கூறினார்கள். மக்கள் சட்டவிரோத மதுபானத்தைப் பாவிக்கின்றனர். காவற்துறையினர் அடிக்கடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கூட, இவ்வாறான சட்டவிரோத மது உற்பத்தியாளர்களிடமிருந்து மிகக் குறைந்தளவு தண்டப்பணத்தையே அறவிடுகின்றனர். இதனால் இவர்கள் மீண்டும் தமது உற்பத்தியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. சில குடும்பங்கள் பெண்களின் பொறுப்பில் உள்ளன. இதனால் இந்தப் பெண்கள் தமது குடும்பங்களுக்காக சுமைதாங்கிகளாக மாறியுள்ளனர். இளம்பெண்கள் சிலர் வேலை தேடி கொழும்பு ஆடைத் தொழிற்சாலைகளுக்கும் வேறு தூர இடங்களுக்கும் பயணிக்கின்றனர். பெண்கள் தமது பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு காலதாமதாகி வருவதானது குடும்பங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்துகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இராணுவத்திலும் இணைந்துள்ளனர்.

அதிபர் செயலகத்திற்கான விண்ணப்பம்

தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி 2012 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் கேப்பாப்பிலவு வாழ் மக்கள் ஐந்து தடவைகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இதன்விளைவாக 2015ல் இந்த மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தொழிற்றுறை மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இவர்கள் இந்த அமைச்சர்களிடம் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த மக்கள் அதிபர் செயலகத்திற்கும் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இவர்கள் 60 நிலப்பத்திரத்தின் பிரதிகளை இணைத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தனது சொந்த நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இவருடன் மேலும் மூவர் தமது சொந்த நிலத்தைத் திருப்பித் தருமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்பாக வாழ முடியாத நிலை காணப்படுவதால் தனது சொந்த நிலத்தைத் தன்னிடம் கையளிக்குமாறு கணவனை இழந்து தனியாக வாழும் இப்பெண்மணி நீதிமன்றில் கோரியுள்ளார். சிறிலங்கா அதிகாரிகளின் தொடர்ச்சியான தலையீடுகள், அச்சுறுத்தல்கள், மற்றும் கெட்டவார்த்தைகள் போன்றவற்றுக்கு மத்தியிலும் இப்பெண்மணி தனது வழக்கைத் தொடர்கிறார். தனது சொந்த இடத்தில் ஐந்து ஏக்கர் நிலங்களும் நெல்வயலும் இருந்ததாக இப்பெண்மணி தெரிவித்தார். ‘எனது நிலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் வெதுப்பகம், சமையலறை, வைத்தியசாலை, இரண்டு கிணறுகள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன. கேப்பாப்பிலவிற்கு வருகை தரும் மூத்த இராணுவ அதிகாரிகள் எனது நிலத்திலேயே தங்கவைக்கப்படுவதாக நான் அறிந்தேன்’ என இப்பெண்மணி தெரிவித்தார்.

மாற்று நிலம்

மாற்றீடாக வேறொரு நிலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு இப்பெண்ணிடம் பிரதேச செயலகத்தினர் கோரிக்கை விடுத்தபோது இவர் அதனை மறுத்துவிட்டார். ‘நாங்கள் ஒருசிலரே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த போதிலும் மிகவும் உறுதியுடன் செயற்படுகிறோம். சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளின் எந்தவொரு கூட்டங்களிலும் நான் பங்கெடுப்பதில்லை. ஏனெனில் நான் அவர்கள் மீது கோபம் கொண்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்’ என இப்பெண் உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த மேமாதம் கேப்பாப்பிலவு வாழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அரசியற் கட்சிகள் தலையீடு செய்ததாகவும் இப்பிரச்சினைக்கு மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண்பதாக ஆர்ப்பாட்டத்தின் மூன்றாவது நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் மூலம் தம்மிடம் உறுதியளித்த நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக சமூக ஆர்வலரான சந்திரலீலா தெரிவித்தார். ‘மூன்று வாரங்களின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சரால் எமது நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுவதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் எம்மிடம் பொதுவான கேள்விகளைக் கேட்டனர். ஆனால் நிலத்தை மீளவும் கையளிப்பது தொடர்பான எவ்வித பணியும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை’ என சந்திரலீலா தெரிவித்தார்.

பாதுகாப்பும் அபிவிருத்தியும்

சில ஆண்டுகால ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள பாணமைக் கிராமத்து மக்கள் பலவந்தமாகத் தமது காணிகளுக்குச் சென்றனர். இந்த நிலங்கள் சிறிலங்கா கடற்படை, வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போன்றவற்றால் 2010லிருந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா அரச படைகளால் பலவந்தமாக, சட்டரீதியற்ற முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த நிலங்களை மீளவும் தம்மிடம் கையளிக்குமாறு கோரி மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை மேற்கொள்கின்றனர். சிறிலங்கா அரசாங்கமானது மிகச் சிறிய அளவு நிலங்களையே மக்களிடம் மீளவும் ஒப்படைத்துள்ளனர். ஆனால், சிறிலங்கா அரசாங்கமானது இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமா?

ஆங்கிலத்தில்  – ருக்கி பெர்னான்டோ, மரிசா டி சில்வா, சுவஸ்திகா அருலிங்கம்
மொழியாக்கம் – நித்தியபாரதி
வழிமூலம்        – சிலோன் ருடே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *