மேலும்

பசில் ராஜபக்சவின் குளிரூட்டப்பட்ட நாய்க்கூண்டு – பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படையினர்

basilசிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச இருந்த போது, அவர் வளர்த்த உயர்வகை நாய்களைப் பராமரிக்க ஐந்து சிறிலங்கா கடற்படையினருக்கு முழுநேரப் பணி வழங்கப்பட்டிருந்ததாக பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், அதிபர் ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ச வளர்த்த இரண்டு கோல்டன் ரெட்ரிவேர்ஸ் நாய்களின் கூண்டைப் பராமரிப்பதற்கு ஐந்து கடற்படையினர் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த உயர்ரக கலப்பு இன நாய்கள் வளர்க்கப்பட்ட கூண்டு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டிருந்தது.

இந்த இரண்டு நாய்களில் ஒன்று சென்னையில் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டதாகும்.

பசில் ராஜபக்சவுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் சட்ட ரீதியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தவிர மேலதிகமாக, 148 இராணுவ மற்றும் கடற்படையினரை உள்ளடக்கிய பாதுகாப்பு அணி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவர்களில் பலர், நாய்க்கூண்டைப் பராமரிப்பது போன்ற பசில் ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாய்க்கூண்டைப் பராமரித்த கடற்படையினருக்கு சிறிலங்கா கடற்படை ஊதியம் வழங்கியது. இந்தப் பணிகளுக்காக இவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு 5000 ரூபாவும் வழங்கப்பட்டது.

பிரதம காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் ராஜபக்சவும், உதவி ஆய்வாளர் ஹேரத்தும் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக, மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டார, ஆணைக்குழு விசாரரணைகளின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *