மேலும்

அமெரிக்கா அவசரப்படக் கூடாது – சுமந்திரன் கோரிக்கை

sumanthiranஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பதால், சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அவசரப்பட்டு திருப்தி வெளியிட்டு விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அமெரிக்க காங்கிரசினால் வொசிங்டனில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிலங்காவின் சமகால நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் உரையாற்றிய போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறிலங்காவில் கடந்த ஆண்டு தமிழ் மக்களின் பங்களிப்புடன்  ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன்போது எமக்கு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் ஆரம்பத்தில் சொற்ப அளவிலான முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்பட்டிருந்த போதும், ஆட்சி மாற்றத்தின் உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை

குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தினால் நிறைவேற்றக் கூடிய விடயங்கள் கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

காணாமற்போனவர்கள் தொடர்பான பணியகத்தை அமைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அது தொடர்பில் முழுமையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் திருப்தியான நிலைமைகள் கிடைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா கணிசமான பங்களிப்பு வழங்கியிருந்தது. அந்தப் பங்களிப்பு தொடரவேண்டும்.

அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதைப்போன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். இருந்தாலும் மிதிபலகையிலிருந்து கால்கள் அவசரமாக எடுக்கப்பட்டுவிடக் கூடாது.

அழுத்தங்கள் மற்றும் ஊக்குவிப்புக்கள் காரணமாகவே எம்மால் மாற்றங்களை காண முடிந்தது. எனவே அமெரிக்கா அவசரப்பட்டு தனது திருப்தியை வெளியிட்டுவிடக் கூடாது.

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக ஆறுமாதகாலங்களுக்கே எனக் கூறி முதற்தடவையாக  நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது வரையில் அது நீடிக்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக வேறு சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு சட்ட ஆணைக்குழு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை விரைவில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு கலப்பு நீதிமன்றமே அவசியம் என நாம் வலியுறுத்தியிருந்தோம்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறையொன்று பற்றி கூறப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்துவதாயின் சிறிலங்காவின் அரசியலமைப்பு இடமளிக்குமா என்ற சந்தேகம் எம்மிடம் இருந்தது.

இது பற்றி நாடாளுமன்றத்தில் பல தட வைகள் சுட்டிக்காட்டியதுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடை பெற்ற ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்துக்கட்சிகள் கூட்டத்திலும் சுட்டிக்காட்டி கூறியிருந்தோம்.

தற் போது சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றுவது ஆச்சரியமளிக்கிறது. இருந்த போதும் சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற பொறிமுறை அமைக்கப்பட வில்லை.

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் வகையில் இந்தப் பொறிமுறை அமையுமா என்பதை பார்வையிட எதிர்பார்த்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

2 கருத்துகள் “அமெரிக்கா அவசரப்படக் கூடாது – சுமந்திரன் கோரிக்கை”

  1. Kandiah Rajaratnam
    Kandiah Rajaratnam says:

    இவர் ஒரு சட்டத்தரணி,வடமராட்சி மண்ணில் விழைந்த பயிர்,பொறுத்திருந்து பார்ப்பது நல்லது,வாழ்த்துக்கள் !

  2. Ruthirakumar Jayaratnam says:

    முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று விசாரணையாளர்களும் சிறி லங்காவிற்குள் இது வரை அனுமதிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் கூட. சில அழுத்தங்களுக்காகப் பணிவது போல் காட்டிக் கொண்டாலும் நீதி நிலைநாட்டப்படுவதிலும், உண்மைகளை வெளிக்கொண்டு வர ஒத்துழைப்பது போன்றூ பாசாங்கு செய்கிறதே தவிர வேறு எந்தவொரு முன்னகர்வுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. “நீதிக்கான தாமதம் அது நிராகரிக்கப்படுவதற்கு ஒப்பானது” 68 ஆண்டுகளாகப் பொறுத்திருக்கிறோம் எதுவும் நடக்கவில்லை. ஐ.நா. பரிந்துரைத்த கலப்புப்பொறிமுறை கூட ஏற்படுத்தப்படுமா என்பது சந்தேகமானதே. இன்னுமொரு வகையில் கூறுவதானால் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து நம்பிக்கைக்குரிய வாசல் இது வரை திறக்கப்படவில்லை. தொடர்ந்து நம்பிக்கைகளே ஊட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *