மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணை – வாக்கெடுப்பை புறக்கணித்த இரு முக்கிய அமைச்சர்கள்

ravi-karunanayakeசிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இரண்டு முக்கிய அமைச்சர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவுமே, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கோத்தாபய ராஜபக்சவை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக்குவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக, அறிவித்த அமைச்சர் ஜோன் செனிவிரத்ன அண்மைய நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

தாம் ஆட்சியில் இருந்திருந்தால் ஜோன் செனிவிரத்னவை பதவியில் இருந்து நீக்கியிருப்பேன் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருந்தார்.

ravi-karunanayake

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்கவும் தெரிவித்திருந்தார்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த கோத்தாபய ராஜபக்ச உதவுவார் என்று ஜோன் செனிவிரத்ன மீண்டும் தெரிவித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்ததுடன், ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சபைக்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அரசாங்கத்தில் இணைந்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு எதிராக வாக்களித்த போதும், ஜோன் செனிவிரத்ன மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேவேளை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டிருந்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான, மகிந்த அணியைச் சேர்ந்த சந்திரசிறி கஜதீரவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *