மேலும்

10 வீதமான வெடிபொருட்களே ஆயுதக்கிடங்கில் இருந்தன – மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க

Major General Sudantha Ranasinghe -pressகொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, 10 வீத வெடிபொருட்களே அங்கு இருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின், மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், “ திங்கட்கிழமை காலை 10.30 மணி வரை ஆயுதக் கிடங்கில் வெடிப்புகள் இடம்பெற்றன. தற்போது அங்கு நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் 1 கி.மீ சுற்றளவுள்ள பிரதேசத்துக்குள் பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

போர் நடந்த போது, கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாக,  கொஸ்கம இராணுவ முகாமே இருந்தது. இங்கிருந்தே ஏனைய பகுதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன.

போர் முடிந்த பின்னர் அங்கிருந்த ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தன. வெடிப்பு நிகழ்ந்த போது, 10 வீதமான ஆயுதங்களே அங்கு எஞ்சியிருந்தன. இன்னும் ஆறு மாதகாலத்தில், இவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும்.

இந்த விபத்தினால் சலாவ இராணுவ முகாமின் பிரதான கட்டடம் மற்றும் ஆயுதக் கிடங்கு என்பன முற்றாகவே அழிந்து போயுள்ளன.  சலாவ இராணுவ முகாமுக்குள் வேறு எந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

Major General Sudantha Ranasinghe -press

அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞான முறைப்படியே ஆயுதக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த விபத்துக்கான நேரடிக் காரணத்தை உறுதியாக இப்போது கூற முடியவிட்டாலும், மின்இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கு,அல்லது மின்னல் தாக்கம் காரணமாக இது நேரிட்டிருக்கலாம்.

இராணுவத்தினரும், கற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். விசாரணைகளின் முடிவிலேயே காரணத்தைக் கூறக்கூடியதாக இருக்கும்.

இந்த விபத்தில் சேதமடைந்த வீடுகளை மீளக்கட்டிக்கொடுக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுள்ளனர்.

ஏனைய பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகளையும் ஆய்வு செய்வதற்கு இராணுவத் தளபதி சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இராணுவ முகாம்கள் மாத்திரமன்றி கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களில் உள்ள ஆயுதக் கிடங்குகளும் ஆய்வு செய்யப்படும்.

வெடித்துச் சிதறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை இராணுவத்தினர் சேகரித்து வருவதுடன், அயலில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் காணிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *