மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் – கோத்தா

gotabhaya-rajapakseகொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரியுள்ளார்.

“சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான முழுப் பொறுப்பையும் இராணுவத் தளபதி தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மிகவும் முக்கியமான அந்த ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இராணுவத் தளபதி தவறியதால் தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் பனாகொட இராணுவத் தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்குகள், சலாவ இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டன.

நான் பாதுகாப்புச் செயலராகப் பொறுப்பேற்ற போது, ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உணர்ந்து, ஒரு பகுதி கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், தியத்தலாவ மற்றும் மாதுறுஓயா இராணுவத் தளங்களுக்கு மாற்றினேன்.

அதற்குப் பின்னர், கொஸ்கம இராணுவ முகாமின் பாதுகாப்பு அப்போதைய இராணுவத் தளபதியால் அதிகரிக்கப்பட்டது.

முன்னர், சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில், 25 ஆயிரம் தொன் வெடிபொருட்கள்  இருந்தன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கிருந்த பெருமளவு ஆயுதங்கள், வியாங்கொட இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டன. வியாங்கொட இராணுவ முகாம் பகுதி கூட பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதி தான்.

இதனால் பொதுமக்கள் அதிக செறிவாக வாழாத, அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஓயாமடுவ, மற்றும் ரம்பேவ பகுதியில் உள்ள பளுகஸ்வெவ பகுதிகளில், இரண்டு ஆயுதக் கிடங்குகளைக் கட்டத் தீர்மானித்தேன்.

அந்தப் பகுதிகளில், கால்நடைத் திணைக்களத்தின் பழைய பண்ணைகள் இருந்தன. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொண்டிருந்த போது தான், தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம்.

அதற்குப் பின்னர் இராணுவத் தளபதியாக வந்தவர், குறைந்தளவு மக்கள் வாழும் பகுதிக்கு ஆயுதக் கிடங்குகளை மாற்றும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தவறியிருந்தார்.

எமது திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தால், கொஸ்கம, வியாங்கொட ஆயுதக்கிடங்குகள் பல மாதங்களுக்கு முன்னரே, மூடப்பட்டிருக்கும்.

நான் ஆயுதங்களின் கையிருப்பைக் குறைத்ததால் இழப்புக் குறைவாக இருந்தது. இல்லாவிட்டால், அழிவுகள் மோசமானதாக இருந்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *