மேலும்

ஜெயலலிதாவை எதிர்த்து 45 பேர் போட்டி – சூடுபிடிக்கிறது தமிழ்நாடு தேர்தல் களம்

tamilnadu electionஎதிர்வரும், 16ஆம் நாள் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 22 முதல் 29ஆம் நாள் வரை வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 30ஆம் நாள் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதையடுத்து, வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ள நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் போது, மொத்தம் 337 பேர் தமது வேட்புமனுக்களை விலக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி, 234 தொகுதிகளிலும் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதற்கு அடுத்தபடியாக, அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறைந்தபட்சமாக ஆற்காடு, வானூர், கூடலூர், வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

திமுக தலைவர் மு.கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

தேமுதிக தலைவரும் மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் 25 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சட்டமன்றத்தேர்தலில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மூன்றாம் பாலினத்தவர்கள் இருவர் களமிறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *