வடமாகாணசபையின் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு பரிசீலிக்க வேண்டும் – சுமந்திரன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து, சமஸ்டி ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும், வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கமும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
“வடக்கு மாகாணசபையின் யோசனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனைய திட்டங்களைப் போன்று இதனையும் கவனத்தில் கொண்டு ஆராய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எப்போதுமே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறது.
2006 ஒக்ரோபர் மாதம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், 18 ஆண்டுகள் இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டேயிருந்தன.” என்று தெரிவித்துள்ளார்.