மேலும்

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

கடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.

இந்த கட்டுரை பர்மா எனப்படும் மியான்மர் எவ்வாறு அதே பிரச்சினையை தனது சூழலுக்கு ஏற்ப கையாளுகிறது என்பதை பார்க்கலாம்.-  புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி*.

சுமார் ஐம்பது வருட இராணுவ ஆட்சியின் பின் பர்மாவில் இன்று புதிய சனநாயக அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இராணுவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் புதிய சனநாயக அரசியல் தலைமைத்துவங்களை தெரிவு செய்து பணிக்கு அமர்த்துவது மிகவும் கடினமான செயற்பாடாக இருப்பதாக பர்மிய செய்தித்தாள்கள் கருதுகின்றன.

இராணுவ அரசியல் சாசனத்திற்கு இணங்க வெளிநாட்டவர்களை, நெருங்கிய உறவினராக கொண்ட பர்மியர் நாட்டின் தலைவராக வரமுடியாது. 77 சதவீத வாக்குகளை பெற்ற தேசிய சனநாயக முன்னனியின் தலைவியும் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டவருமான  ஓன் சான் சூ கி அவர்கள் பிரித்தானிய பிரசையான கல்வியாளர் ஒருவரை மணம் முடித்திருந்தார். அவரின் மகன்கள் இருவரும் பிருத்தானிய பிரசாஉரிமை  பெற்றவர்களாவர். இந்நிலையில் ஓன் சான் சூ கி அவர்கள் பர்மிய தலைவராக வர முடியாத நிலை உள்ளது. இங்கே பர்மா அல்லது மியான்மர் (இரண்டும் ஒரு தேசத்தையே குறிக்கிறது) .

ஆங் சான் சூகி அவர்கள் தனது வாழ்க்கையை பர்மிய மண்ணுக்காக அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறார். இராணுவ ஆட்சி காலத்தில் 15 வருடங்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று பர்மாவின் வருங்கால அரசியல் விதியை நிர்நயிக்கும் முக்கிய நபராக மாறி இருக்கிறார்.

பர்மா குறித்த அரசியல் மாற்றங்களில் ஓன் சான் சூ கி அவர்களின் மீது உலகம் இன்று தனது முழுபார்வையையும் வைத்திருக்கிறது. தேச கட்டமைப்பு பர்மாவின் இன்றைய தேவையாக உள்ளது.  இந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தலைவராக ஓன் சான் சூ கி அவர்களை உலகம் பார்க்கிறது.

உள்ளுர் ஆட்சி அதிகாரத்தில் பழக்கப்பட்டு விட்ட இராணுவத்திற்கு அதன் வரைமுறைகளை கற்றுக்கொள்ள வைத்தல் என்பது முக்கிய தடைதாண்டும் காரியமாக உள்ளது. கடந்த ஐம்பது வருட பர்மிய இராணுவ ஆட்சிகாலத்தில் இருந்த இராணுவ அரச கட்டமைப்பை மக்கள் நிர்வாகத்தில் இருந்து விடுவிப்பது என்பது சாதாரண விடையமாக தெரியவில்லை.

இராணுவம் தனது ஆட்சிகாலத்தில் குறிப்பாக 2015இல் இடம் பெற்ற மாணவர் போராட்டங்களை மிக கடினப்போக்குடன் அடக்கி ஒடுக்கியது, இராணுவ கெடுபிடிகளுக்கு எதிரான விமர்சகர்களை விசாரணை செய்வதில் முன்னுரிமை கொடுத்து இராணுவம் அனைவரையும் பழிவாங்கியது. சிறுவர்களை படையில் சேர்த்து படை நடவடிக்கைகளை நடத்தியது. சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்களை இத்தகைய படைகள் மூலம் நசுக்கியது. இந்த குற்றச்சாட்டுக்கள்  சனநாயக பாரம்பரியங்களுக்கு எதிரானவை. இவை விசாரணை செய்யப்பட வேண்டும் என்பது மேலை நாடுகளின் கருத்தாகவும் உள்ளது.

இராணுவ ஆட்சியாளர் தரப்பிற்கு இந்த அழுத்த நிலைகாரணமாக எழக்கூடிய பிரச்சினைகளும் , எதிர்காலமும்,  இதனால் எதிர்கொள்ள நேரிடும் தண்டனைகள் என்ன என்பது  குறித்து நன்கு தெரிந்திருப்பதால், அரச திணைக்கள அதிகாரங்களை விட்டு கொடுப்பதிலும் புதிய ஆட்சியாளர்கள் அவற்றை கையகப்படுத்துவதிலும் பெரும் இழுபறிநிலைகள் எதிர்பார்க்கப்படுகிறது

இவற்றுக்கும் மேலாக இராணுவ திணைக்களங்களுக்கு பதிலாக மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களை உருவாக்கி அதிகாரங்கள் வழங்கப்பட்டு கட்டுப்பாடுகளை கொண்டு வருதல் என்பது இராணுவ உறவினர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூகத்தில் சனநாயக அரசாங்கம் செல்வாக்கை பெறுவது,அடிப்படை ஆதரவை கட்டி எழுப்புவது சார்ந்த பிரச்சினையாக பார்க்ப்படுகிறது.

சுமார் ஒரு மில்லியன் அரச சேவையாளர்களை கொண்ட இருபது தினைக்களங்களில் தேர்தல் வெற்றியின் பின்பு எந்த வித மாற்றமும் சடுதியாக நிகழ்ந்தாக தெரியவில்லை. ஒட்டு மொத்த நாடே வறுமைநிலையில் உள்ளது. எழுபது சதவீத கிராமங்களை கொண்ட நாட்டில் மின்சார வசதிகள் அற்ற நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுப்பாடுகள் அற்று வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் விதிமுறைகள் இல்லாத கைத்தொழில் பேட்டைகளும் மறுபுறத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இதுபோன்ற மேலும் ஏராளம் சவால்கள் புதிய அரசாங்கத்தால் எதிர் கொள்ளப்பட்டுள்ளது அவற்றில் சில இங்கே தரப்படுகிறது . கல்வி வசதிகள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சமுதாயத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அவசியமாக உள்ளது. பௌத்த மதவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருவதுடன் மதங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நிரப்புதல் இன்னுமோர் சவாலாக தெரிகிறது. பர்மாவின் மனித அபிவிருத்தி சுட்டியை தரமுயர்த்த வேண்டிய அவசர தேவை உணரப்பட்டுள்ளது

இதன் பொருட்டு மேலும்,பர்மாவில் இராணுவ ஆட்சியின் போது சிறுபான்மை இனங்ளுடன் எழுந்த முரண்பாடுகளால் உருவாகிய ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சமாதான முயற்சிகளில் இறங்குதல், பொருளாதார மீள் ஒழுங்குகளை செய்தல், இதன் மூலம், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்பட வைத்தல்,வெளிப்படைத் தன்மையையும் தகவல் பெற்று கொள்ளும் உரிமையையும் உறுதி செய்தல், என ஓன் சான் சூ கி அவர்களின் பொறுப்புகள் மிகவும் பெரியதாக பார்க்கப்படுகிறது.

பர்மாவின் நிலையத்துக்கும் இயற்கை வள தன்மைகளுக்கும் இணங்க வெளியுறவு கொள்கையும், சக்தி வளமும் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதேவேளை உள்நாட்டில் கல்வி மாற்றம் கொண்டு வருவதற்கும் உள்நாட்டு ஆயுதப்போராட்டத்தில் இறங்கி உள்ள சமூகங்களை கட்டுக்குள் கொண்டு வருவது போன்ற மிகப்பெரிய தேவைகள் உள்ளன.

Miyanmar China pipeline

நாட்டின் தலைவராக பதவி ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், இராணுவ அரசசாசன சயையுடனான பேச்சு வார்த்தைகள் விவாதங்களின் பின் உயர் அமைச்சர் பதவி ஒன்றை ஓன் சான் சூ கி  எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கின்ற போதிலும்,  நாட்டின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனித்து கொள்ளும் பலம் அவரிடமே இருப்பதாக மேலைதேய ஊடகங்கள் கருதுகின்றன.

அதேவேளை சூ கி அவர்கள் தலைமை தாங்கும் தேசிய சனநாயக முன்னனி பேச்சாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப நாட்டின் தலைமைத்துவ பொறுப்பை சூ கி அவர்களின் நம்பிக்கைக்குரிய பள்ளிக்கூட நண்பரான கிதின் கையோ  என்பவர் செயலுரிமை பெற்ற பிரதிநிதியாக செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சிகாலத்தில் மேற்கு நாடுகள் பர்மா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்த அதேவேளை, பர்மாவில் சீன செல்வாக்கு அதிகமாக தென்பட்டது. சீன பொருட்களின் வரவும் சீன கட்டுமான திட்டங்களும் அதிகம் நிறுவப்பட்டன. இராணுவ ஆட்சியாளர்களின் பல்வேறு தேவைகளும் அத்துடன் சீன அரச உதவியுடன் நிறைவேற்றம் பெற்றது.

2009ஆம் ஆண்டில் இரண்டு தேசங்களுக்கும் இடையில் 2.5 பில்லியன் டொலர் பெறுமதிவாய்ந்த பெற்றோல் வாயு குழாய் அமைக்கும் திட்டம் போடப்பட்டது பர்மிய -சீன உறவில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சுமார் 500 மைல்கள் நீளம் கொண்ட இத்திட்டத்தின் மூலம் இந்து சமுத்திர கரையிலிருந்து சீனாவின் தென் மேற்கு பிராந்தியமான யுனான் பகுதிக்கான எரிபொருள் தேவை எடுத்து செல்லப்படுகிறது. மத்தியதரைக்கடல்  நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மசகு எண்ணெய், எண்ணெய் தாங்கி கப்பல்கள் மூலம் ஒடுங்கிய மலாக்கா நீரினை வழியாக, தென் சீன கடல் பகுதிக்கு கொண்டு செல்வதற்குப் பதிலாக பர்மிய கப்பற் தளத்திலிருந்து நேரடியாக தரை வழியாக குழாய்கள் அமைத்து சீனாவுக்குள் செலுத்தும் திட்டம் இதுவாகும்.

2013 ஜுன் மாதம் இந்த திட்டம் நிறைவடைந்து இன்று முழு அளவிலான உபயோகத்தில் உள்ளதாக சீன இணைய பத்திரிகையான சின்சுவா 2013 ஒக்ரோபரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்த தேயின் செயின் 2011இல் அரச தலைவர் பதவியை பெற்று கொண்டதும் மறுசீரமைத்தல் கொள்கையை பின்பற்றினார். அமெரிக்க. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தடைகளில் இருந்து விடுபட்டு கொள்ளும் முகமாக, நாட்டில் சனநாயக முறைமைகளை மேலும் அறிமுகம் செய்யாத சீர்திருத்த கொள்கையில் நம்பிக்கை கொண்டவராக கருதப்பட்டார். இந்த கொள்கைக்கு ஏற்ப  சீனாவுடனான உறவை குறைத்துக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த காலங்களிலேயே ஓன் சான் சூ கி அவர்கள் வீட்டு காவலில் இருந்து விடுதலையானார்,  நேர்மையான தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் சீன முதலீடுகள் முடக்கம் பெற்றது.  ஒருசில மிகப்பாரிய நிதி முதலீட்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவே கூறலாம். இவற்றில் ஒன்று மைத்சோன் அணைகட்டு நிர்மாணத் திட்டமாகும். ஐராவதி நதியை குறுக்கறுத்து கட்டப்படும் இந்த அணை, ஐம்பது வருடகாலத்தில் ஒரு செலவும் இன்றி பர்மாவிற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கொண்டது இத்திட்டம்.

இராணுவ ஆட்சியாளர்களுடன் சட்டத்திற்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டது என்றும் உள்ளுர் தலைவர்களிடம் இடம்பெற்ற பேச்சுகளின் போது முறைகேடுகள் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் புதிய சீர்திருத்த இராணுவ அரசாங்கத்தால்  இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் பர்மாவுடனான வெளியுறவுக்கொள்கையில் இன்று வரை சீனாவின் முதன்மை நோக்கம், ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட முதலீடுகளை உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்வதாகவே இருந்து வருகிறது.

அதேவேளை வடகிழக்கு பர்மாவில் சீன வம்சாவளியினரை அதிகம் கொண்ட கிராமங்களில் பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப்புரட்சி எழுந்திருந்தது.  புகலிடம் அளித்தல்,  பயிற்சி அளித்தல்,  ஆயுதம் கொடுத்தல் என எந்தவித தலையீடுகளையும் சீனா மறுத்திருந்த போதிலும், புதிய அரசாங்கத்திற்கு இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைப்பதாக சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

Clindon Su Ki

சீன இராட்சத இலத்திரனியல் வர்த்தக நிறுவனமான அலிபாபாவினால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட 112 வருட பழமைவாய்ந்த ஹொங்கொங் ஆங்கில நாளிதளான South China Morning Post‎ ‎பத்திரிகையின் தகவலுக்கு இணங்க பர்மாவில் சீன முதலீடுகள் அதனுடைய மேலை நாட்டு போட்டியாளர்களின் முதலீடுகளிலும் பார்க்க பின்தங்கி உள்ளது. சக்திவள முதலீடுகளிலும் தொலை தொடர்பு முதலீடுகளிலும் மேலை நாடுகள் அதீத கவனம் செலுத்துகின்றன. பர்மிய அதிகாரிகள் அனுமதி வழங்கும் முறைகளில் சீனாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க மேலை நாடுகளின் விண்ணப்பங்களில் அதிக சார்புத் தன்மை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை மேலை நாடுகளுக்கு வழங்கிய பொருளாதார சீர்திருத்த உத்தரவாதம் காரணமாக, சீனாவில் அதிகம் தங்கி இருக்காத நிலையை உருவாக்க நினைத்தாலும், உள்ளுர் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள் காரணமாக இது மிகவும் கடினமான காரியமாகும் என்பதையும் நாசூக்காக South China Morning Post‎‎ வெளியிட்டுள்ளது.

இந்த நிலையை சாதகமாக கொண்டு மேலைத்தேய நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பர்மாவில் operation leap frog எனப்படும் தவளைப்பாச்சல் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. என மியான்மர் Times செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய அளவிலான நாட்டின் பெரும்பாகத்தை தொலைத்தொடர்பு சமிக்கை முலம் உள்ளடக்கக் கூடிய ஒப்பந்தத்தை நோர்வே நாட்டின் Telenor நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருந்த அதேவேளை தேசிய சனநாயக முன்னனியின் தலைவி ஓன் சான் சூ கி அவர்கள் பர்மாவின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்று இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்று இருந்தாலும் அவர் ஒரு பிரதமருடைய அதிகாரத்துடன் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை அவரது பதவி ஏற்பின் பின்  முதன்முதலில் சந்தித்த வெளியுறவு அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யி ஆவார்.

சீனாவுக்கு பர்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் உள்ளது என்பதை சீன வெளிவிவகார அமெச்சரின் முதல் சந்திப்பிலேயே வெளிப்படையாக தெரிகிறது. புதிய பர்மிய அரசாங்கம் உள்நாட்டு பொருளாதார அரசியல்களில் வல்லரசுகளின் வளர்ந்து வரக்கூடிய செல்வாக்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயமாக இருக்கும். மேற்கையும் கிழக்கையும் சமாளிக்கும் இராசதந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மை தேவை பர்மாவின் புதிய அரசாங்கத்தின் தேவையாக உள்ளது.

மறுபுறத்தில் அமெரிக்கத்தரப்பு பார்வையில் பர்மாவில் சனநாயக மீள் எழுச்சியின் தேவையை அமெரிக்கா வலியுறுத்தும் அதேவேளை, தகவல் சுதந்திரம், மனித அபிவிருத்தி ஆகியவற்றில் பர்மா கவனம் செலுத்த வேண்டும் என்பது அமெரிக்கப் பார்வையில் வெளிப்படையாக கூறப்பட்டாலும் சீன ஆதிக்கத்தை தென் கிழக்காசியாவில் கட்டுப்படுத்துவதன் மூலம் சீனாவின் உலக தலைமைத்தவ போக்கை கட்டுக்குள் வைத்திருப்பது அதன் மறைமுக நகர்வாக தெரிவதாக THE IRRAWADDY செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

பர்மாவின் புதிய அரசியல் திருப்பம் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பாரிய தனியார் கூட்டுறவு நிறுவனங்கள் மேலும் பல வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களை கவரும் நிலையை பெற்றிருக்கிறது. பர்மிய மக்களும் இந்த முதலீட்டாளர்களின் வரவை வேலைவாய்ப்பை மையமாக கொண்டு, ஆவலுடன் வரவேற்கும் நிலையில் உள்ளனர். பதிலாக இந்த நிறுவனங்கள் யாவும் தமது சொந்த நலன்களை மையமாக கொண்ட திட்டங்களையே வைத்திருக்கின்றன. International Finance Corporation (IFC) International Monetary Fund (IMF), World Bank ஆகியன இவற்றுள் அடங்குவன ஆகும். சமூகங்களின் பாதுகாப்பு குறித்து செயற்படும் நிறுவனங்களின் பார்வையில் கூட்டுறவு முதலீட்டாளர்களின் செயற்பாடுகள் சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை, சமூகங்களின் தேசிய அடையாளம் ஆகியவற்றை சிதைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என அறிக்கைகள் முலம் தெரிவித்துள்ளன.

வேலை வாய்ப்புகள் நிமித்தம் சமூகங்களை இடம்பெயர வைத்தல், அவர்களது பண்பாட்டு வாழ்க்கை முறையை சீரழித்தல், அபிவிருத்தி என்ற பெயரில் இயந்திர மயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைக்குள் மக்களை திருப்புவதன் முலம் தனிமனித மனமகிழ்வை இல்லாது ஒழிக்கும் ஒரு புதிய மாற்றத்தை இந்த பாரிய றிறுவனங்கள் உருவாக்கி வருவதாகவும் முறைப்பாடுகள் உள்ளன. ஆனால் இதற்குரிய பரிகார சட்டதிட்டங்களை உருவாக்கும் உரிமை உள்நாட்டு அரசாங்கங்கத்திடமே உள்ளன என்பது இந்த சமூக பாதுகாப்பு நிறுவனங்களின் கருத்தாக உள்ளன.

வெளிவிவகார அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்ட  ஆங் சான் சூ கி அவர்கள் இதுவரையில் எந்தவித அறிக்கையும் விடவில்லை, ஆனால் அவருடைய செவ்விகளில் இருந்த புரிந்து கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மியான்மரின் அணிசேராக் கொள்கை குறித்த அடிப்படைகளே பொதுவான வார்த்தைகளாக பார்க்கப்படுகிறது. ஆக அவர் அனைத்து நாடுகளுடனும் சார்புத்தன்மை அற்ற நட்புடன் கூடிய ஒரு உறவை வளர்த்து கொள்ளவே விரும்புகிறார் என்பது அவதானிகளின் பார்வையாக உள்ளது.

அதேவேளை அமெரிக்கத் தேர்தலில் சனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அவர்கள் வெற்றி பெற்று பதவி ஏற்குமிடத்து. ஹிலாரி கிளின்டனுக்கும் ஓன் சன் சூகி க்கும் இருக்கக் கூடிய அன்னியோன்னியம் சீன தரப்பிற்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவும் ஒரு பார்வையாக உள்ளது.

அடுத்து சிறீலங்கா வெளியுறவு கொள்கை பண்புகள் குறித்து பார்க்கலாம்.

– லோகன் பரமசாமி

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *