மேலும்

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி – ஜெயலலிதா குற்றச்சாட்டு

jeyalalitha-meetingஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் கபட நாடகம் ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

திருச்சியில் நேற்று மாலை நடந்த  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பல கபட நாடகங்களை ஆடி இலங்கைத் தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2006 பேரவைத் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழிகாண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், அவர்கள் செய்தது இதற்கு எதிர்மறையான செயல்களைத்தான்.  திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியில் நடைபெற்று வந்தபோது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செவி சாய்க்கவில்லை எனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் கருணாநிதி மேற்கொள்ளவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன், இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2009, மே 16ஆம் நாள் கருணாநிதியின் மகள் கனிமொழி, அனந்தியின் கணவர் சசிதரனுடன் செய்மதித் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது கனிமொழி, அவர்களை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாகவும் கூறியுள்ளார்.  அதை நம்பியே சரண் அடைந்த ஈழத்தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போய்விட்டனர் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாது, இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி.

2011இல் அதிமுக அரசு பொறுப்பேற்றப் பிறகு, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கைப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் நிகழ்த்தியவர்கள் மீது சுதந்திரமான, அனைத்துலக விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் சட்டபேரவையில் என்னால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலைமை சீரடைந்த பின்னரே இங்குள்ள தமிழர்களை விருப்பத்தின் பேரிலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.

இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும்வகையில் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மத்திய அரசில் அங்கம் வகித்தபோதே, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் துணைபோன கருணாநிதி, இப்போதைய தேர்தல் அறிக்கையில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்தி செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்பதை நம்புவதற்குத் தமிழர்கள் ஏமாளிகள் அல்ல” என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *