மேலும்

சிறிலங்காவில் ஆர்வத்தை ஏற்படுத்தாத தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

tn-party-leadersபூகோள அமைவிட ரீதியாக தமிழ்நாடு, சிறிலங்காவிற்கு மிகவும் அருகிலுள்ள மாநிலமாகும். இதற்கப்பால், வரலாற்று ரீதியாக நோக்கில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலானது சிறிலங்கா வாழ் மக்களை நாட்டமுறச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பாக அக்கறை கொள்ளவில்லை என சிறிலங்காவின் அதிபரான மைத்திரிபால சிறிசேனவிற்கு நெருக்கமானவரும் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

சிறிலங்காவின் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டுத் தேர்தலைக் கவனத்திற் கொள்ளாமைக்கான காரணம் என்ன என வினவிய போது, ‘மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுடன் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. தற்போது இவ்வாறான எவ்வித பிரச்சினைகளும் காணப்படவில்லை’ என மகிந்தவின் காலத்தில் அமைச்சராகப் பதவிவகித்த கலாநிதி ராஜித சேனரட்ன பதிலளித்தார்.

‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிறிலங்காவில் தீவிர கவனத்திற் கொள்ளப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்றன. இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் ஊடாக மட்டுமே தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என சிறிலங்காவின் தலைமைகள் நம்புகின்றன’ என நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலரும் முன்னணி இடதுசாரித் தலைவருமான விக்ரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழ்நாட்டு அரசியலானது கொழும்பிற்கும் புதுடில்லிக்கும் இடையிலான உறவில் தாக்கத்தைச் செலுத்தியதாக சிறிலங்காவின் கட்சித் தலைமைகள் முன்னர் கருதின. எனினும் இது மிகப் பெரிய காரணி அல்ல’ என யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் அரசியல் பொருளியல் ஆய்வாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.

26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவுற்றமை, தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக புரிந்துணர்வை எட்டும் முகமாக பிரதான சிங்களக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானித்தமை போன்ற காரணிகள் தமிழ்நாட்டுத் தேர்தல் மீதான சிறிலங்கா அரசியல்வாதிகளின் கவனத்தைக் குறைப்பதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக, ராஜபக்சவின் ஆதரவாளரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

‘இந்தியாவில் இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசியற் கட்சிகள் அதிக கவனம் செலுத்துவது வழமையாகும். வெளிவிவகாரக் கோட்பாடுகளுக்காக மட்டுமன்றி, இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கோட்பாடுகளையும் அவதானிப்பதில் நாங்கள் விருப்பங் கொண்டுள்ளோம்’ என 42 வயதான கண்டி மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரும், காமினி திசநாயக்கவின் மகனுமான (1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரே காமினி திசநாயக்க) மயந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த அரசாங்கம் மீனவர் பிரச்சினை தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்பதை அறிவதில் ஆர்வங்கொண்டுள்ள இலங்கையர்கள் தொடர்ந்தும் தமிழ்நாட்டுத் தேர்தல் நிலவரத்தை அவதானித்து வருகின்றனர் என திரு.கதிர்காமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழிமூலம்       – தி ஹிந்து
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *