மேலும்

இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

JR-ranilஇந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

1987இல் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ராஜீவ் காந்தி சிறிலங்காவிற்குப் பயணம் செய்த நிகழ்வுக்கும், சீனாவின் கடன்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்குப் பயணம் செய்த நிகழ்வுக்கும் இடையில் வியத்தகு ஒற்றுமை காணப்படுகிறது.

இந்தியாவால் சிறிலங்கா மீது உருவாக்கப்பட்ட ஈழப்போர் என்கின்ற பொறியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வேறு வழிகள் எதுவுமற்ற நிலையில் 1987இல் ரணிலின் மாமாவான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்தப் பொறியை ஜே.ஆர் தானாகவே உருவாக்கியிருந்தார்.

1977 பொதுத் தேர்தலின் போது, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மற்றும் அவரது மகனை அரசியல் ரீதியாக ஜே.ஆர் பரிகாசம் செய்திருந்தார்.  அப்போது இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி அரசாங்கமானது தனது அரசியல் அதிகாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறிலங்காவை ஆட்சி செய்தசிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு இராஜதந்திர வரைமுறைகளையும் மீறி உதவி செய்தது.

தன்னை சிறிமாவோஅரசியல் ரீதியாக எதிர்த்து நிற்பதற்கான பலத்தை இந்திரா காந்தியே வழங்கியிருந்தார் என்பதை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் நன்கறிந்திருந்தார். 1977 தேர்தலில் இந்தியாவின் ஆட்சியைத் தம்வசம் வைத்திருந்த தாயும் மகனுமான இந்திரா காந்தி – சஞ்சய்  காந்தி ஆகியோர் தோற்றது போன்று சிறிலங்காவில் இடம்பெறும் பொதுத் தேர்தலிலும் தாயும் மகனுமான சிறிமாவோ – அனுரா ஆகியோரும் தோல்வியடைவார்கள் என ஜே.ஆர் எதிர்வுகூறியிருந்தார்.

இந்திரா காந்தி இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாதது என்றளவிற்கு ஜே.ஆர் பரிகாசம் செய்திருந்தார். எனினும், குறுகிய காலத்தில் இந்திரா காந்தி மீண்டும் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.

அந்தவேளையில், இந்திரா காந்தியின் நண்பியான சிறிமாவோ, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்தார். இந்திரா காந்தியை நாடினால் ஜே.ஆரைத் தோற்கடிப்பதற்கு தனக்கு உதவுவார் என சிறிமாவோ கருதினார். அமெரிக்காவிற்கு ஆதரவான ஜே.ஆர் அரசாங்கத்தின் வெளியுறவுக் கோட்பாடானது சோவியத் குடியரசிற்கு ஆதரவான இந்திரா காந்தியின் இந்திய அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சிறிமாவோ சுட்டிக்காட்டினார்.

ஜே.ஆர் அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தி ஜே.ஆரை அழிப்பதற்காக சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தோற்றம் பெற்ற தமிழ் இராணுவ அமைப்புகளுக்கு உதவுவதென இந்திரா அரசாங்கம் தீர்மானித்தது. இந்திராவின் ஆசியுடன் வடக்கில் உருவாக்கப்பட்ட யுத்தமானது ஜே.ஆர் அரசாங்கத்தை சீர்குலைப்பதில் வெற்றிபெற்றது.

ஜே.ஆரின் நல்வாய்ப்பாக, வடக்கில் யுத்தம் ஆரம்பித்த வேளையில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தியுடன் புதிய உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஜே.ஆர் முன்னெடுத்தார். ஜே.ஆரின் வலைக்குள் ராஜீவ் காந்தி விழுந்தார். சிறிலங்கா விடயத்தில் ஜே.ஆருடன் விழிப்புடன் பழகுமாறு இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கிய அதே தரப்பினர் ராஜீவ் காந்தியிடமும் இது தொடர்பாக ஆலோசனை வழங்கினர்.

எனினும், ராஜீவ் தனது சிறப்புப் பிரதிநிதியான றொமேஸ் பண்டாரியின் ஊடாக ஜே.ஆருடனான இந்திய-இலங்கை உறவில் புதியதொரு பக்கத்தை உருவாக்கினார்.

ஜே.ஆர் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்கள் வெற்றியளித்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான ஒப்புதலை ஜே.ஆர் வழங்கியதுடன், போரை உருவாக்கக் காரணமாக இருந்த இந்தியாவிடமே மீண்டும் அந்தப் போரைத் தோற்கடிப்பதற்கான பொறுப்பும் கையளிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்கின்ற சிறிமாவோவின் கனவு சுக்குநூறாகியது.

ஜே.ஆருடன் ராஜீவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை சிறிமாவோவால் பொறுக்க முடியவில்லை. இந்திரா உயிருடன் இருக்கும் போது கொழும்பில் குண்டுகள் வெடித்த போது, இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்திப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்ததாக சிறிமாவோ தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஜே.ஆர் இந்தியாவுடன் உறவை முறித்துக் கொண்டதால் இந்தியா சிறிலங்காவிற்கு ஒருபோதும் உதவாது என சிறிமாவோ தெரிவித்தார். இவரது இந்தக் கருத்திற்கு மாறாக இந்திராவின் மகனான ராஜீவ் காந்தி, ஜே.ஆருக்கு உதவியபோது சிறிமாவோ அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தின் பின்னர் சிறிமாவோ இந்தியா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார். இதனை ஜே.ஆர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மிகப் பாரிய நிதி நெருக்கடி:

1970-77 வரையான காலப்பகுதியில் திருமதி பண்டாரநாயக்கவிற்கு இந்தியா உதவி செய்தது போன்றே, 2005-2014 காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு சீனா உதவி செய்தது. ஊவா மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற போது சீன அதிபர் சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார். இத்தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறுவது மிகக் கடினம் என மகிந்த கருதினார்.

ஆனால் மகிந்த அரசியல் நலனைப் பெறுவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எரிபொருளின் விலையைக் குறைப்பதற்கு உதவுவதாக சீன அதிபர் மகிந்தவிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார். அந்த வேளையில் கூட, நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத அளவு நிதி நெருக்கடியை மகிந்த சந்தித்தார்.

2015 வரவு செலவுத் திட்டத் தயாரிப்பிலும் சீனாவே சிறிலங்காவிற்கு உதவியது. சீனாவின் கடன் பிடிக்குள் சிறிலங்காவை மகிந்தவே சிக்கவைத்திருந்தார் என்பதன் காரணமாக சீனா, மகிந்தவிற்கு உதவியது. எந்தவொரு வருமானத்தையும் ஈட்டித்தராத மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்றவற்றைப் பராமரிப்பதற்கான நிதியை உயர் வட்டி வீதத்தில் மகிந்த சீனாவிடமே பெற்றிருந்தார்.

2015 அதிபர் தேர்தலில் சீனாவால் மகிந்தவிற்கு உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், மைத்திரியே இத்தேர்தலில் வெற்றி பெற்றார். மகிந்தவால் உருவாக்கப்பட்ட சீனாவின் கடன்பொறியை மைத்திரியும் ரணிலுமே சுமக்க வேண்டியிருந்தது. சீனக் கடன் சுமையால் மைத்திரி-ரணில் அரசாங்கம் தோல்வியுறுகின்ற நாளுக்காக மகிந்த காத்திருந்தார்.

1977ல் இந்திராவை ஜே.ஆர் எவ்வாறு பரிகசித்தாரோ அதேபோன்றே, 2015 அதிபர் தேர்தலில் சீனாவின் துறைமுகத் திட்டத்தை ரணில் விமர்சித்திருந்தார். இது சீனாவைக் காயப்படுத்தியது. சீனக் கடன் பொறிக்குள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை சீனா விழுத்தும் என மகிந்த நம்பினார். எனினும், ராஜீவ் காந்தியுடன் ஜே.ஆர் புதிய பயணம் ஒன்றை ஆரம்பித்தது போன்றே, சீனாவுடன் ரணில் புதியதொரு பயணத்தை ஆரம்பித்ததுடன், சீனாவுடன் கடன் பரிமாற்ற ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார்.

இந்திய-இலங்கை துடுப்பாட்ட நிர்வாக சபையின் ஊடாக ஜே.ஆர், ராஜீவ் காந்தியுடன் புதிய உறவைப் பேண ஆரம்பித்தார். இதேபோன்று ஹொங்கொங்கிலுள்ள PR நிறுவனத்தின் ஊடாக ரணில், சீனாவுடனான உறவைப் புதுப்பித்துள்ளார்.

இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே.

ரணிலின் பரிந்துரைகளை சீனா மிகக் கவனமாக ஆராயவேண்டும் எனவும் உடனடியாக இதற்கான ஒப்புதல் வழங்கப்படக் கூடாது எனவும் சீன அறிஞரான சுவாங்க், சீனாவின் குளோபல் ரைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்திருந்தார். இது ஜே.ஆருடனான ராஜீவின் உறவு ஆரம்பிக்கப்பட்ட போது இந்திராவின் ஆலோசகர்களால் ராஜீவிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு ஒப்பாகக் காணப்படுகிறது. ரணிலின் பரிந்துரைகளுக்கு சீனாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அவதானித்தவாறு அனைவரும் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *