மேலும்

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினால் மூன்றாம் தரப்பினரே நன்மையடைவார்கள் – மாவை சேனாதிராஜா

mavai-senathirajahஇந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் சில அரசியற் சக்திகள் தீவிரமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, ‘த சண்டே லீடர்’ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை எனவும், ஆனால் இவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வொன்றை விரும்புவதாகவும், இந்த நாட்டில் வாழும் மக்கள் போன்று தாமும் சம உரிமையைப் பெற்று வாழவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விரும்புவதாக சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், பயங்கரவாதச் செயற்பாடுகள் மீள ஆரம்பித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: இந்த விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. எமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம் இத்தற்கொலை அங்கியானது பழையது என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். போரையோ அல்லது வன்முறைகளையோ மீண்டும் செயற்படுத்துவதில் எந்தவொரு தமிழ் மக்களும் ஈடுபடவில்லை. இதனை அவர்கள் விரும்பவுமில்லை. தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டதானது, இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீளிணக்க முயற்சிகளை குழப்புவதற்கான ஒரு செயலாகும். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்க் கட்சிகள் போன்றன ஒன்றுசேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசியற் தீர்வொன்றை எட்டுவதற்கும் தம்மால் இயன்ற பணிகளை ஆற்றுகின்றனர்.

மீள்குடியேற்றம், நில விவகாரம் போன்றவற்றைத் தீர்ப்பதில் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்கள் பணியாற்ற விரும்புகின்றனர். தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகமும் தனது ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் நல்லிணக்கத்தை உருவாக்கவும், எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையானது 2015ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. சிறிலங்கா அரசாங்கமும் இத்தீர்மானத்தை மதித்து தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. எனினும், இந்த முயற்சிகளைக் குழப்புவதில் பல்வேறு சக்திகள் முன்னிற்கின்றன. இந்தக் கட்சிகளால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே, இந்தப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்க் கட்சிகள் மிகவும் அனுபவம் வாய்ந்த அறிவார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இதனால் தமிழ்க் கட்சிகள் தமது கடப்பாடுகளிலிருந்து விலகிக் கொள்ள முடியாது.

கேள்வி: இவ்வாறான பிரச்சினைக்கு எதிர்க்கட்சியே மூலகாரணம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஆம், எதிர்க்கட்சியானது தனது சொந்த அரசியல் நலனிற்காகவே இப்பிரச்சினையை ஏற்படுத்தியது. தற்கொலை அங்கி விவகாரத்தின் மூலம் எதிர்க்கட்சியானது தனக்கான அரசியல் இலாபத்தை அடைய முயற்சிக்கின்றது. இதன் மூலம் இந்தக் கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடத்திச் செல்கின்றன. இவர்களது இந்த நிகழ்ச்சி நிரலை சிங்கள மக்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்கொலை அங்கியை பாதுகாப்புப் படையினர் மட்டும் கண்டெடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழ் மக்கள் காவற்துறையினருக்கு அறிவித்தனர் என்பதை இந்த அரசியற் கட்சிகள் மறந்துவிட்டன. மறைத்து வைக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக கிராமத்து மக்கள் அறிவித்தனர் என்கின்ற தகவலானது தமிழ் மக்கள் எந்தவொரு வன்முறைகளிலோ அல்லது யுத்தத்திலோ ஈடுபட விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது.

கேள்வி: இந்த நாட்டை ஜனநாயக நாடாக மாற்றுவது மற்றும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய இரண்டையும் அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழுவானது பிரதானமாக மையப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இவ்விரு விடயங்களும் மிகவும் முக்கியமானவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: இவை அனைத்தும் குறிப்பாக நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசியற் தீர்வு என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் ஏற்பட்டுள்ள மனித உரிமை விவகாரங்களைத் தீர்ப்பதற்காக வரையப்பட்ட ஐ.நா தீர்மானத்தை நோக்கி அனைத்துலக சமூகமும் தமிழ் மக்களும் சேவையாற்றுகின்றனர். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் மீளிணக்கப்பாடு என்கின்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகவே இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அரசியற் தீர்வின் ஊடாகத் தீர்த்து வைக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தமது மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளப் புனரமைத்தல் போன்றவற்றுக்கு இரு மாகாண சபைகளுக்கும் அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் எந்தவொரு கெடுதலும் ஏற்படாது. இதேபோன்றே தென்னாபிரிக்காவிலும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டது. இதேபோன்று எமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதிகாரப் பகிர்வு என்பது மிக முக்கியமானது என நான் நம்புகிறேன். இவை இரண்டும் மிகவும் முக்கியமான விடயங்கள். அத்துடன் ஏனைய விடயங்களும் கருத்திற்கொள்ளப்படும் போது இவை முழுமையடையும்.

கேள்வி: புதிய அரசியல் யாப்பின் ஊடாக சமஸ்டியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சமஸ்டித் தீர்வானது நாட்டைக் கூறுபோடும் என ஏனையோர் கருதுகின்றனர். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: தற்போதைய ஒற்றையாட்சித் தீர்வின் கீழ், எமது பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையும் எங்களால் எட்ட முடியாது. எல்லா சமூகத்தவர்களையும் ஒரு நாட்டின் கீழ் கொண்டு வரவேண்டிய தேவையுள்ளது. ஆனால் சமஸ்டித் தீர்வு எட்டப்பட்டால், இது நாட்டைப் பிளவுபடுத்தும் என சில அரசியல்வாதிகள் கருதுகின்றனர். சமஸ்டி நிர்வாகத்தின் கீழ் இந்த நாடானது மேலும் ஒருங்கிணைக்கப்படும் என நான் கருதுகிறேன்.

கேள்வி:  தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகம் முன்வரும் அதேவேளையில், தமிழ் மக்கள் மேலும் அதிக கோரிக்கைகளை முன்வைப்பதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர். இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இல்லை, இது அப்படியல்ல. உள்நாடு மற்றும் அனைத்துலக சமூகத்தின் கருத்தின் பிரகாரம் சிறிலங்காவின் அரசியல் யாப்பு மாற்றுங்கள் மிகவும் முக்கியமானவையாகும். இவற்றின் மூலமே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட முடியும். வடக்கு உட்பட போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் காரணமாகவே, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமகுடிமக்களாக வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் சபை இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்துள்ளது. தற்போது சிறிலங்காவானது தமிழர் விவகாரங்களைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. நாங்கள் நியாயமற்ற விடயங்களைக் கோரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், ஏனெனில் நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளோம். ஆகவே இது எமது அதிகூடிய கோரிக்கையாகக் கருதப்பட முடியாது.

கேள்வி: தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண சபையை தீர்மான வரைவு நடவடிக்கையில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: ஆம், நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடமும் வினவியிருந்தோம். அண்மையில் இந்த விவகாரமானது வடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது தொடர்பில் தீவிரம் பெற்றிருந்தது. இந்த அடிப்படையில் நாங்கள் பிரதமரைச் சந்தித்து எமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தோம். சிறிலங்கா அரசாங்கமானது வடக்கில் வாழும் மக்களுக்கு எத்தகைய வீடுகள் பொருத்தமானது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக வடக்கு மாகாண சபையுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் தெரிவித்திருந்தோம்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக எமது நாடாளுமன்றக் குழுவானது மீள்குடியேற்ற அமைச்சிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தோம். 2.1 மில்லியன் செலவில் வடக்கில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகள் அவர்களுக்குப் பொருத்தமானவை அல்ல என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறானதொரு உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் எட்டியதற்கான காரணம் என்ன என்பதை விளக்குமாறும் நாங்கள் கோரியுள்ளோம். வடக்கு மாகாண சபை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய உறுப்பினர்கள் என எவருடனும் கலந்துரையாடாது இவ்வாறான தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு எட்ட முடியும் என்பதை அறிய நாம் விரும்புகிறோம். இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக மூன்றாம் தரப்பினர்களே நலன்பெறுவார்களே தவிர எமது மக்கள் நலன் பெறமாட்டார்கள் என்பதே எமது கருத்தாகும்.

கேள்வி: வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் சமூகத்தையும் உள்ளீர்ப்பதற்கான திட்டங்களை நீங்கள் கொண்டுள்ளீர்களா?

பதில்: மீளிணக்கப்பாட்டை நோக்கும் போது அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. அரசியற் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் புலம்பெயர் சமூகம் மிகவும் ஆவலாக உள்ளது. இவர்கள் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஈடுபட விரும்புகிறார்கள். வடக்கில் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை மேற்கொள்வதில் புலம்பெயர் சமூகம் தயாராகி வருகிறது. வடக்கில் மீள்நிர்மானத்திலும் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதிலும் தாம் ஆர்வமாக உள்ளோம் என்பதை புலம்பெயர் சமூகமானது ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

கேள்வி: தற்போது தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமையானது தமக்குச் சாதகமாக அமையவில்லை என சில சிறுபான்மைக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இக்கருத்தானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருத்தமாக உள்ளதா?

பதில்: இது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் இது தொடர்பாக ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுகின்றன. இது தொடர்பான இறுதி அறிக்கை இன்னமும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்கள் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர் நாங்கள் இது தொடர்பாகத் தீர்மானம் எடுப்போம். சிறிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இந்த விவகாரத்தை எதிர்த்து நிற்க வேண்டும். இப்புதிய தேர்தல் முறைமையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வழிமூலம்        – த சண்டே லீடர்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *