மேலும்

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டதா? – மக்களைக் குழப்பும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

mahinda-psdதமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அளுத்கம விகாரையில் நேற்று வழிபாடுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கொஞ்சமாக தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது முற்றிலுமாக இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், மகிந்த ராஜபக்சவின் பேச்சாளரான ரொகான் வெலிவிட்ட, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த 50 இராணுவத்தினர் மாத்திரம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் 108 இராணுவத்தினரும், 104 காவல்துறையினரும் இருந்ததாகவும் இவர்களில் 50 இராணுவத்தினர், இராணுவத் தலைமையகத்தினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும், ரொகான் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமது பாதுகாப்புக் குறைக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் பணியகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது,

20 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, விடுதலைப் புலி்களின் அச்சுறுத்தல் தமக்கு இருப்பதால், விலக்கிக் கொள்ளப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீண்டும் அளிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்டோர் கருத்து வெளியிட்டனர்.

இதற்குப் பதிலளித்த அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என அறிவித்தார்.

அவரின் உயிரை பாதுகாக்கும் தேவை எமக்கும் இருக்கிறது. அவரின் பாதுகாப்புக்கு 103 இராணுவத்தினரும், 103 காவல்துறையினரும் வழங்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக இருந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் தொகை குறைக்கப்படவில்லை.

அவரது பாதுகாப்பை குறைத்திருப்பதாக மாற்று எதிர்க்கட்சியே கூறி வருகிறது. அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது இவர்களே.

முன்னாள் அதிபரின் பாதுகாப்பைக் குறைக்க எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை  என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *